தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிச்சாமி, தான் அமைச்சராக பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத்துறையில், அவரது சம்பந்திக்கும் மற்றும் சம்பந்தி பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களுக்கும், ஒப்பந்தம் அளித்தது தொடர்பாக, தி.மு.க சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்நிலையில், புகாரை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பு (லஞ்ச ஊழல் தடுப்புத்துறை) முதல்வரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால், விசாரணை நேர்மையாக இருக்காது என்ற முடிவுக்கு வருகிறேன். அதனடிப்படையில், மனுதாரர் அளித்த புகாரை சிபிஐ The Central Bureau of Investigation (CBI) விசாரிக்க உத்தரவிடுகிறேன் என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதிஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதிஷ் சந்திரா பிறப்பித்துள்ள உத்தரவின் தமிழாக்கம், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
ஒரு குற்ற வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அமைப்பிடமிருந்து, மற்றொரு அமைப்புக்கு மாற்ற நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
அதேநேரம் வழக்கமான முறையில் இந்த அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. இந்த வழக்கில் மாநில காவல்துறை மீது மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். அப்படிப்பட்ட சூழலில் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்படுத்த வேண்டும். குற்றச்சாட்டுகள் குறித்த நேர்மையான விசாரணை நடக்கிறது என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரை உயர்ந்த பதவியில் உள்ள நபரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகாரை, லஞ்ச ஒழிப்பு துறையிடமிருந்து வேறு அமைப்புக்கு மாற்ற முடிவெடுக்கப்படுகிறது.
பொது வாழ்வில் அனைவரும் நேர்மையுடன் இருக்க வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் மீதான நேர்மையை நிரூபிக்கும் வகையில் வேறு விசாரணைக்கு உத்தரவிடுவதை, வெறுப்பின் காரணமாக உத்தரவிடுவதாக கருதக்கூடாது.
உயர் பதவியில் இருக்கும் நபர் மீது தீவிரமான குற்றச்சாட்டு உள்ளதால் தானாக முன்வந்து, தன்னிச்சையாக விசாரிக்க கூடிய சுதந்திரமான விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட நபரின் மீதான சந்தேகங்கள் கலைந்து நம்பிக்கை உண்டாகும்.
புகாரில் முகாந்திரம் உள்ளதா? இல்லையா? என்ற முடிவுக்கு தற்போதைய சூழ்நிலையில் வரமுடியாது. இந்த புகாரை லஞ்ச ஒழிப்புதுறை விசாரித்தால் முறையாக இருக்காது.
புகாரை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பு முதல்வரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால், விசாரணை நேர்மையாக இருக்காது என்ற முடிவுக்கு வருகிறேன்.
அதனடிப்படையில், மனுதாரர் அளித்த புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படுகிறது.
மனுதாரர் அளித்த புகார் மனு, அதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கிடைத்த ஆவண ஆதாரங்களை, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர், ஒரு வாரத்தில் சென்னை சிபிஐ இணை இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆவணங்கள் கிடைத்தவுடன் ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கி, அதை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் மீது எவ்வித கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்பதை மீண்டும் தெளிவு படுத்துகிறேன்.
வெளிப்படையான, நேர்மையான, விசாரணை நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நீதியின் மீதான அக்கறையுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதிஷ் சந்திரா தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த 20 மாதங்களாக, நெருப்பாற்றில் நீந்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிச்சாமிக்கு, இப்போது மிகப்பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com