இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து, இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன விடுத்த அறிவிப்பு, அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று, இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன எடுத்த தீர்மானத்திற்கு இடைக்கால தடையும் விதித்துள்ளது.
இந்த தற்காலத் தடை எதிர்வரும் டிசம்பர் 07 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையில் தேர்தலுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, இலங்கை உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது.
எம்மால் இன்றைக்கு 38 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நல்லாட்சி மிக்க ஆட்சியை, சோதனை செய்து பார்த்த நாள் இன்றாகும். சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவும், உச்சநீதிமன்றமும், இந்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளும் மாத்திரமன்றி சிவில் சமூகமும் இணைந்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தன்னிச்சையான அதிகாரத்தை தோற்கடிக்கச் செய்த நாளாக, இன்றைய நாள் வரலாற்றில் இடம் பிடிக்கின்றது.
இலங்கை உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பு குறித்து ரணில் விக்ரமசிங்கே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
අප විසින් මීට මාස 38 කට පෙර ආරම්භ කරන ලද යහපාලන ආණ්ඩුකරනය අද අත්හදා බැලූ දවසක්. විධායක ජනාධිපතිවරයාගේ අත්තනෝමතික බලය ස්වාධීන මැතිවරණ කොමිසමත්, ශ්රේෂ්ඨාධිකරණයත්, මේ රටේ දේශපාලන පක්ෂ මෙන්ම සිවිල් සමාජය විසින් පරාජය කළ දිනය බවට අද දිනය ඉතිහාසයට එක්වනු ඇත.
இந்நிலையில், நாளை (14.11.2018) காலை 10 மணிக்கு இலங்கை பாராளுமன்றம் கூடவுள்ளதாக, இலங்கை சபாநாயகர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் மீ்ண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி, ஆட்சியமைப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சூளுரைத்துள்ளார்.
உச்ச நீதிமன்றின் தீர்ப்பின் மூலம் சிறிலங்காவில் சட்டத்தின் ஆட்சியும், நீதிமன்றின் சுயாதீனத் தன்மையும் தொடர்ந்தும் நிலை நாட்டப்பட்டிருக்கின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாகவும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
-என்.வசந்த ராகவன்.