நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதது, பிற வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களைப் பயன்படுத்தியது ஆகியவற்றுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.10,391 கோடியை வசூலித்துள்ளன. இது வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் நடத்திய அதிகாரப்பூர்வக் கொள்ளை என்பதில் சந்தேகமில்லை.
பொதுத்துறை வங்கிகளில் தனிநபர் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக மட்டும் ரூ.6,246 கோடி தண்டம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றொரு வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களை மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தியதற்காக ரூ.4145 கோடி தண்டம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக வசூலிக்கப்பட்ட தண்டத்தில் 46.33 விழுக்காடும், தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களை பயன்படுத்தியதற்காக வசூலிக்கப்பட்ட தொகையில் 37.47 விழுக்காடும் பாரத ஸ்டேட் வங்கியால் வசூலிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காகவும், பிற வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களை பயன்படுத்தியதற்காகவும் அபராதம் விதிப்பதே அபத்தமான கொள்கை ஆகும். இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும், மக்களுக்கான பயன்களை வங்கிக் கணக்குகள் மூலம் வழங்குவதன் மூலம் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கலாம் என்பதாலும் அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வங்கிக் கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் வங்கிச் சேவை என்பது கிட்டத்தட்ட கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அவற்றுக்கு குறைந்தபட்ச கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? அதிலும் பாரத ஸ்டேட் வங்கியில் நகர்ப்புறக் கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக ரூ.5000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அமைப்புசாராத் தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உறுதி செய்யப்பட்ட வருவாய் கிடையாது. அத்தகைய சூழலில் அவர்கள் அவசரத் தேவைக்காக வங்கிக் கணக்கில் உள்ள குறைந்தபட்ச இருப்புத்தொகையிலிருந்து தான் எடுக்க வேண்டும். அதற்காக தண்டம் விதிப்பது மனிதநேயமற்ற செயலாகும். பலரின் வங்கிக் கணக்குகளில் இத்தகைய தண்டத்தொகை பிடித்தம் செய்யப்பட்டதால், கணக்கில் இருந்த முழுத் தொகையும் பறிபோயிருக்கிறது. இது சேமிக்கும் பழக்கத்தை மட்டுமின்றி, வங்கிக்கணக்கை பராமரிக்கும் வழக்கத்தையும் அடியோடு ஒழித்து விடும்.
பிற வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் மையங்களில் பணம் எடுப்பதற்காக தண்டம் விதிப்பதும் கண்டிக்கத்தக்கது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் எந்த மையத்தில் வேண்டுமானாலும் பணம் எடுக்கும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டியது வங்கிகளின் கடமையும், வாடிக்கையாளர்களின் உரிமையும் ஆகும். சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கு அதிகபட்சமாக 4% மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது. நடப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி வழங்கப்படுவதில்லை. இந்தப் பணத்தைதான் வங்கிகள் அதிகபட்சமாக 15% வரை வட்டிக்குக் கொடுத்து இலாபம் ஈட்டுகின்றன. வங்கிகளின் மூலதனத்தைவிட சேமிப்புக்கணக்கு மற்றும் நடப்புக்கணக்கில் உள்ள தொகை பலமடங்கு அதிகமாகும். வங்கிகள் லாபம் ஈட்ட அடிப்படைக் காரணமாக விளங்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதை விட்டுவிட்டு தண்டம் விதித்து தண்டிப்பது நல்ல அணுகுமுறை அல்ல.
இதில் குறிப்பிடப்பட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால் வங்கிகள் வசூலிக்கும் இந்த தண்டத்தால் ஒரே ஒரு விழுக்காடு கூட பணக்காரர்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்; இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகளாகத் தான் இருப்பார்கள். சலுகைகள் அனைத்தும் பணக்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்; தண்டங்கள் அனைத்தும் ஏழைகளுக்கு மட்டுமே விதிக்கப்படும் என்பதும் வளர்ச்சிக்கான பொருளாதார சிந்தனையாக இருக்காது; மாறாக கொடூரமான பொருளாதார சிந்தனையாகவே இருக்கும்.
வங்கிகளின் அனைத்துச் செயல்பாடுகளையும் முறைப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கி, குறைந்தபட்ச இருப்புத் தொகை, தானியங்கி பணம் வழங்கும் கட்டணம் ஆகியவற்றை மட்டும் வங்கிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது வங்கிகளின் கொள்ளைக்கு வாசல் திறக்கும் வேலையாகும். இந்த அநீதியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எந்த சேவைக்கும் கட்டணமோ, தண்டமோ விதிக்கக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு தமது அறிக்கையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
-ஆர்.அனுசுயா.