தமிழகத்தில் உள்ள 44 சர்க்கரை ஆலைகளில் 3 பொதுத்துறை, 16 கூட்டுறவு, 24 தனியார் மற்றும் 1 சர்க்கரை ஆலை இயக்கப்படாமல் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1,600 கோடியாகும்.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் எத்தனாலை கரும்பிலிருந்து தாயரிப்பதில்லை. மதுபான ஆலைகளுக்கு எரிச்சாராயம் தயாரிக்க தேவையான வெள்ளப்பாகு உற்பத்தி செய்து மலிவு விலைக்கு மதுபான ஆலைகளுக்கு வழங்குவதால், மத்திய அரசும் நிதி உதவி தருவதில்லை. இந்த சூழலில் கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை தராமல் இருக்கின்ற போது பாதிக்கப்படுவது கரும்பு விவசாயிகள்தான். இதற்காக தமிழக அரசு இதுவரை எந்த ஒரு தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக சர்க்கரை உற்பத்தி 250 லட்சம் டன்னாக இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் சர்க்கரை உற்பத்தி 90 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. விவசாயிகள் கடன் வாங்கி அதிக ஆர்வத்துடன் பயிரிட்டும்இ விதவிதமான நோய் தாக்குதல், நீர்வளம் குறைவு போன்ற காரணங்களால் விளைச்சல் குறைந்து விடும். இருப்பினும் விளைந்த கரும்பை ஆலைகளுக்கு அனுப்பி கரும்புக்கு உண்டான தொகையை பெறலாம் என்றால் அதிலும் நிலுவை இருக்கிறது.
இதனால் விவசாயிகள் உழைத்த உழைப்புக்கும் செய்த முதலீட்டிற்கும் முழு பயன் கிடைக்காமல் பெரும் சிரமத்தில் வாழ்கிறார்கள். நம் நாட்டின் மொத்த கரும்பு உற்பத்தி 350 லட்சம் டன் என்றால் அதில் நாட்டின் தேவைக்கு 250 லட்சம் டன் இருந்தால் போதும். ஆண்டுக்கு 100 டன் உபரியாக உள்ளது. கடந்த ஆண்டில் 50 லட்சம் டன் இருப்பில் இருந்ததோடு இந்த ஆண்டு உள்ள 100 டன் இருப்பையும் சேர்த்தால் மொத்தம் 150 லட்சம் டன் உபரியாக உள்ளது.
கரும்பு பயிரிடும் போது நடவு, அறுவடை, ஆலைகளுக்கு அனுப்புதல், இதர செலவுகள் என்று கணக்கிட்டால் கரும்பு விவசாயிகளுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் மாநில அரசு அறிவித்த ஊக்கத்தொகையை முழுமையாக வழங்காமல் விவசாயிகளை தொடர்ந்து அலைகழித்து வருகின்றன.
கரும்பை நட்ட விவசாயிகள் அதனை விளைவித்தும் இன்னும் அதற்கான விலையை, நிலுவைத் தொகையை பெற முடியவில்லை என்றால் அது தமிழக அரசின் செயலற்ற நடவடிக்கையை வெளிப்படுத்துகிறது. எனவே, தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.1,600 கோடி நிலுவைத் தொகை உடனடியாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல 2017 – 2018 ஆம் ஆண்டுக்கு உற்பத்தி மானியமாக தமிழக அரசு வழங்கிய ரூ. 200 கோடியை 2018 -2019 ஆண்டிற்கு ரூ. 500 கோடியாக உயர்த்தித் தர வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-கே.பி.சுகுமார்.