குற்ற வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 6 ஆண்டுகள் பொதுத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்துள்ளது.
ஆனால், சட்டத்தை உருவாக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்றால், அவர்கள் ஆயுள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் அடிப்படையில், வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்காக, சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று, கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தி அதுகுறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி ஒவ்வொரு மாநில அரசுக்கும், அந்த மாநில உயர் நீதிமன்றத்திற்கும் உச்சநீதி மன்றம் கடிதம் அனுப்பியது. முதல் கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் தகவலை உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி அப்போது வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.14.89 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதை பயன்படுத்தி சிறப்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, சிறப்பு நீதிமன்றம் சிங்காரவேலர் மாளிகை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டிடத்தில் திறக்க சென்னை உயர்நீதி மன்றம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்றம் அங்கு அமைக்கப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக ஜெ.சாந்தி நியமனம் செய்யப்பட்டார். இந்த புதிய சிறப்பு நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ந்தேதி முதல் செயல்படத் தொடங்கியது.
இந்த சிறப்பு நீதிமன்றத்தில்தான் நேற்று வரை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.சாந்தி.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1998-ம் ஆண்டு பாலகிருஷ்ண ரெட்டி பாஜகவில் இருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாசனூர் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடை செய்யக்கோரி பாஜக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்லெறியப்பட்டது. பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மேல்முறையீடு செய்ய உள்ளதாக பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது தண்டனையை ஒரு மாதகாலம் நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தனது அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாவை ஏற்றுக்கொண்ட தமிழக ஆளுநர், அவர் வகித்து வந்த பொறுப்புகள் அனைத்தையும், அமைச்சர் செங்கோட்டையனிடம் கூடுதலாக ஒப்படைத்துள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Matra mandhirigal,sekarReddy,Ramamohanrao ivargalperil yeppo nadavadikkai varum alladu anda case yellam Arasiyalukkaga dharaivarkapatada?