சென்னை டி.பி.சத்திரத்தில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை தள்ளி எலும்பு முறிவு ஏற்படுத்தி தப்ப முயன்ற குற்றவாளியை பிடித்த காவலர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.
K-6 டி.பி.சத்திரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜேஷ் (எ) ராஜேஷ் கண்ணா, (வயது 24) என்பவர், பரமேஸ்வரன் நகர் 3-வது தெருவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், K-6 டி.பி.சத்திரம் காவல் குழுவினர் 09.01.2019 அன்று இரவு 07.00 மணியளவில் ராஜேஷ் கண்ணாவை பிடிக்க சென்றபோது அவர் தப்பி ஓடியுள்ளார்.
அவரை பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளர் S.சுபாஷ் மற்றும் காவலர் B.மதியழகன் ஆகியோரை குற்றவாளி ராஜேஷ் கண்ணா தள்ளிவிட்டதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது, உதவி ஆய்வாளர் சுபாஷ் என்பவருக்கு வலது கையில் எலும்பு முறிவு மற்றும் காவலர் மதியழகன் என்பவருக்கு காலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.
உடனே, உடன் இருந்த காவலர்கள் விரட்டிச் சென்று குற்றவாளி ராஜேஷ் கண்ணாவை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேற்படி சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த K-6 டி.பி.சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் S.சுபாஷ், தலைமைக் காவலர்கள் S.சையது சபியுல்லா (த.கா.17566), M.G.முனாப், (த.கா.17066), காவலர்கள் B.மதியழகன் (கா.38043), சேரன்ராஜ் (கா.38988) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன், நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
-எஸ்.திவ்யா.