திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகம், விமானப் போக்குவரத்து மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டுத் துறையின் புதிய கண்டுபிடிப்புக்களுக்கான கூட்டு முயற்சியை மேம்படுத்த, இந்திய விமான நிலைய அலுவலகம் (AAI) அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.
வான்வழிச் சேவை மற்றும் விமான நிலையச் சேவைகளில் இருதரப்பு மேம்பாடு மற்றும் தீர்வு சார்பான ஒரு நீண்டகால கூட்டிணைவை ஏற்படுத்துவதே அந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், இத்துறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்தி வான்வழி போக்குவரத்து மற்றும் விமான நிலையங்களின் கட்டுமானத்தில் உள்ள சவால்களை முறியடித்து இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் நோக்கமாக உள்ளது.
எதிர்கால வான்வழிப் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து மேலாண்மை, விமான நிலையச் செயல்பாடு மற்றும் தீர்வு, வான்போக்குவரத்து மறு பொறியியல் ரேடார் மற்றும் பல்நோக்கு உணர்செயலி ஒருங்கிணைப்பு ஆகிய பிரிவுகளில் பயிற்சி வகுப்புகளின் மூலம் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறமைகளை இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ள இது ஒரு முதற்படியாக அமையும் என தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் இயக்குனர் முனைவர். மினி ஷாஜி தாமஸ் பேசினார்.
மேலும், இரு நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், உதவிகரமாகவும் இருந்து தீர்வுகளைக் காண்பார்கள் என (AAI) யின் தலைமையக இணைப் பொது மேலாளர் K.முரளி கூறினார்.
இவை தொடர்பான கலந்துரையாடலில் திருச்சி விமான நிலைய இயக்குனர் K.குணசேகரன், வான் போக்குவரத்து மேலாண்மை துணைப் பொது மேலாளர் G.L.லல்லு ஆகியோரும் முக்கிய பங்கு வகித்தனர்.
-ஆர்.சிராசுதீன்.