மத்திய பாதுகாப்பு துறையில் வேலைப்பார்க்கும் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிப்பு!

அகில இந்திய படைகலன் தொழிற்சாலைகள் ஊழியர் சங்க பொதுசெயலாளர் ஸ்ரீ குமார்.

மத்திய அரசு பாதுகாப்பு துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்தும், ஊழியர்களின் பென்சன் உரிமையை வென்றெடுக்க வலியுறுத்தி 4 லட்சம் பாதுகாப்புதுறை தொழிலாளர்கள் ஜனவரி 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 3 நாள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தராமன் பாதுகாப்பு துறையில் தேவையான உதிரி பாகங்களை தனியார் உற்பத்தி செய்வதற்கான அனுமதி அளிப்பதற்கு 20-ம்தேதி தொடங்கி வைக்க திருச்சிக்கு வருவது பாதுகாப்புதுறை ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை எற்படுத்தியிருப்பதாக, அகில இந்திய படைகலன் தொழிற்சாலைகள் ஊழியர் சங்க பொதுசெயலாளர் ஸ்ரீ குமார் தனது செய்தி அறிக்கையில்   தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் உள்ள 6 படைகலன் தொழிற்சாலைகளையும் சேர்த்து இந்தியாவில் 41 படைகலன் தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் 275 விதமான கருவிகள் தயாரிக்கப்படுகிறது. அந்த 275 கருவிகளை தற்போது தனியார் நிறுவனங்கள் தயாரிப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கு முன்பு பாதுகாப்பு துறை அமைச்சர்களாக இருந்த ஜார்ஜ்பெர்னான்டஸ், பிரணாப்முகர்ஜி, ஏ.கே.ஆண்டனி ஆகியோர், படைத்துறை தயாரிக்கும் உற்பத்தி பாகங்கள் தனியாரிடம் வழங்கப்படமாட்டாது என்ற வாக்குறுதியை மீறுவதாகும். மேலும், மனோகர் பாரிக்கர் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்தப்போது படைகலன் தொழிற்சாலைகள் 2019 மற்றும் 2020 ஆண்டில் ரூ 20 ஆயிரம் கோடி என்ற உற்பத்தி இலக்கை எட்டவேண்டுமென நிர்ணயித்திருந்தார். 2017 மற்றும் 2018 ஆம் நிதி ஆண்டில் ரூ.17 ஆயிரத்து 700 கோடி உற்பத்தி இலக்கை எட்டியது.

ஆனால், 2018 மற்றும் 2019 ஆண்டு மத்திய அரசு உற்பத்தி இலக்கை ரூ11 ஆயிரத்து 600 கோடி என பாதியாக குறைத்து விட்டது. இதனால் பாதுகாப்பு துறை தொழிலாளர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக ராணுவ வீரர்களுக்கு நவீன தொழில்நுட்ப ஆடைகளை தயாரிக்கும் ஆவடி படைகலன் தொழிற்சாலையில் வேலைப்பார்க்கும் 800 பெண் தொழிலாளர்கள் உட்பட, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை கேள்வி குறியாகி உள்ளது. 

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் ஹெச்ஏபிபி தொழிற்சாலை, அரவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலைகளுக்கு தேவையான பணிகளை வழங்கிட மத்திய அரசு மறுத்து வருகிறது.

ஆவடி என்ஜின் தொழிற்சாலையில் டாங்கிகளுக்கு தேவையான இன்ஜின்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் தகுதியை பெற்ற பிறகும் வெளிநாட்டில் இருந்து இன்ஜின்களை வாங்க மத்திய அரசு முடிவெடுத்து வருகிறது. மேலும், பாதுகாப்புதுறை ஆராய்ச்சி நிறுவனங்கள் உருவாக்கும் தொழில் நுட்பத்தை தனியாரிடம் வழங்கிட இந்நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கப்படுவதோடு, பல பாதுகாப்புதுறை நிறுவனங்களை நடப்பாண்டில் இழுத்து மூட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இது மத்திய அரசின் பாதுகாப்புதுறைக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களை அழித்து விட்டு, டிபன்ஸ்கோரிடர் என்னும் பெயரில் தமிழகம் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பெரு தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பது நாட்டின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கும் .

மேற்கண்ட அரசின் கொள்கை முடிவுகளை கண்டித்தும், உறுதிபடுத்தப்பட்ட பென்சன் வேண்டியும், வரும் 23-ம் தேதி முதல் 25ம் தேதி வரை 3 நாள் அகில இந்திய அளவில் பாதுகாப்புதுறையில் வேலைப்பார்க்கும் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டததில் ஈடுப்பட உள்ளனர்.

இந்நிலையில் பாதுக்காப்பு துறைக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு தனியாருக்கு அனுமதி வழங்குவதற்கு மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீத்தராமன் திருச்சியில் தொடங்கி வைக்கப்போவது பாதுகாப்புதுறை தொழிலாளர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளதாக, அகில இந்திய படைகலன் தொழிற்சாலைகள் ஊழியர் சங்க பொதுசெயலாளர் ஸ்ரீகுமார் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply