மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடைக் கிடைக்கும் வரை, அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திப்பதை தமிழக முதலமைச்சரும், தமிழக அமைச்சர்களும் மற்றும் தமிழக அரசு பிரதிநிதிகளும் தவிர்க்கவேண்டும்.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், சிகிச்சை தொடர்பாக வெளியான மருத்துவ அறிக்கைகள் பற்றியும், பல்வேறு சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும், கடுமையான விமர்சனங்களும், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் நிர்வாகிகள் மீதும் மற்றும் மருத்துவர்கள் மீதும் எழுந்துள்ள நிலையில், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (21.01.2019) தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியை, அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் செயல் துணைத் தலைவர் டாக்டர் பிரீத்தா ரெட்டி மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் (புதிய முயற்சிகள்) தலைவர் வி.சத்தியநாராயண ரெட்டி ஆகியோர்  நேரில் சந்தித்து, தரமணியில் நடைபெற உள்ள மருத்துவமனை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை கொடுத்துள்ளனர்.

இச்சந்திப்பை தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் நிர்வாகிகளை சந்திக்காவிட்டால் குடியா முழுகிவிடும்?! 

அம்மாவின் மரணத்தில் தங்கள் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாலும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தற்போது நிலுவையில் உள்ளதாலும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் என்கிற முறையில், இத்தருணத்தில் நான் உங்களை சந்திக்க இயலாது என்று, “முகத்தில் அறைந்தார்போல்” சொல்லி, இதுபோன்ற தர்ம சங்கடங்களை தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தவிர்த்திருக்க வேண்டும்.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடைக் கிடைக்கும் வரை, குறிப்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவு தெரியும் வரை, அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திப்பதை, தமிழக முதலமைச்சரும், தமிழக அமைச்சர்களும் மற்றும் தமிழக அரசு பிரதிநிதிகளும் முழுமையாக தவிர்க்கவேண்டும். மேலும், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் சார்பில் வரும் விழா மற்றும் நிகழ்ச்சிக்கான அழைப்புகளை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.

அப்போதுதான் தமிழக அரசு மீது மக்களுக்கு முழு நம்பிக்கை வரும். மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் ஆன்மாவும் சாந்தியடையும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

One Response

  1. Welfare Venkataraman January 22, 2019 3:38 pm

Leave a Reply