வாங்கிய கடனை திருப்பி தருவதாக வரசொல்லி கூலிப்படையினரை ஏவிவிட்டு 4 பேரை வெட்டியதில் இரண்டு பேர் பலி!- விராலிமலை அருகே நடந்த விபரீதம்.

புதுக்கோட்டை மாவட்டம்,  விராலிமலை, திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர் வீராச்சாமி, இவரது சொந்த ஊர் விராலிமலை அருகே உள்ள காரப்பட்டி, இவருக்கு முத்து என்ற ஒரே மகன் உள்ளார்.

வீராசாமி திருச்சியில் உள்ள பைனான்சியரிடம் ரூபாய் ஒன்றரை கோடி பணம் வாங்கி கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை கிருஷ்ணமூர்த்தியிடம் பலமுறை கேட்ட போது பணம் தருவதாக சொல்லி பணம் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக களமாவூர் அருகே உள்ள நமனராய சத்திரத்தில் உள்ள தனது சொந்த தோட்டத்தை, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வீராசாமிக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால், கிருஷ்ணமூர்த்தி எழுதிக்கொடுத்த இடத்தை விட்டு காலி செய்ய மறுத்து அங்கேயே தங்கி விவசாயம் செய்து வருகிறார். இந்த இடத்தை நீங்கள் எனக்கு எழுதிக் கொடுத்து விட்டீர்கள். ஆனால், இடத்தை காலி செய்து கொடுக்காமல் இங்கே விவசாயம் செய்து வருகிறீர்கள்? என்று பலமுறை கிருஷ்ணமூர்த்தியிடம், வீராச்சாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், இடத்தையும் தராமல், பணத்தையும் தராமல் வீராச்சாமியை, கிருஷ்ணமூர்த்தி ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், பணம் தருவதாக கூறி இன்று (06.02.2019) காலை 9 மணியளவில் கிருஷ்ணமூர்த்தி நமனராய சத்திரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வீராசாமியையும், அவரது மகன் முத்துவையும் வரச் சொல்லி இருக்கிறார்.

இதனால் வீராச்சாமி தனது சம்பந்தி சிவசங்கு மற்றும் அவரது மகன் ஜெயராமன் இருவரையும் அழைத்துக்கொண்டு கிருஷ்ணமூர்த்தியின் வீடு உள்ள நமனராய சத்திரத்துக்கு இன்று சென்றுள்ளார்.

அங்கு இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி தனது கூலிப்படையை ஏவிவிட்டு அவர்கள் நான்கு பேரையும் அந்த தோட்டத்திலேயே ஓட ஓட விரட்டி வெட்டிவிட்டு அங்கிருந்து கிருஷ்ணமூர்த்தியும் மற்றும் கூலிப்படையினரும் தப்பி ஓடிவிட்டனர். இதில் வீராச்சாமி மற்றும் அவரது மகன் முத்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சிவசங்கு மற்றும் அவரது மகன் ஜெயராமன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் போலீசார், சிவசங்கு மற்றும் அவரது மகன் ஜெயராமன் இருவரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த இடத்தை கீரனூர் டிஎஸ்பி பிரான்சிஸ் நேரில் பார்வையிட்டார். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கீரனூர் டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூலிப்படையினரை தேடிவருகிறார்கள்.

-கே.பி.சுகுமார்.

 

Leave a Reply