சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஏற்காட்டில் இன்று கைது செய்யப்பட்டான்.
சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த சின்னப்பன் மகன் ரவி, வயது 50. என்பவர், இன்று மதியம் ஏற்காடு காக்கம்பாடி கிராமத்திற்கு மரம் வெட்டும் தொழில் சம்பந்தமாக வந்து விட்டு, தனது பைக்கில் சேலம் திரும்பியுள்ளார். ஏற்காடு படகு இல்லம் அருகே இவரை தடுத்து நிறுத்திய நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
ரவியிடம் இருந்து ½ பவுன் மோதிரம், கைகடிகாரம் மற்றும் 1,000 பணத்தையும் பிடுங்கி கொண்டு அங்கிருந்து வனப்பகுதியில் ஓடியுள்ளார்.
இது குறித்து ஏற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில், ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் ஹரிகரன் உள்ளிட்ட போலீசார், ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மலைப்பாதையில் 12-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள சாலாப்பாறை முனியப்பன் கோவிலை ஓட்டியுள்ள வனப்பகுதியில் திரிந்த அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர் மேட்டூரை சேர்ந்த முருகேசன் மகன் ரகு, வயது 38. என்பது தெரியவந்தது.
இவர் அவினாசியை சேர்ந்த ஜெயமனி என்ற பெண்ணை கடத்தி, மிரட்டி அவரிடம் இருந்து 25 லட்சம் பணம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும், சேலம், கிருஷ்ணகி, நாமக்கல், கோவை உள்ளிட்ட 4 மாவட்டஙகளில் இவர் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார் என்ற தகவலும் காவல்துறை விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.
‘பல நாள் திருடன் ஒருநாள் நிச்சயம் சிக்குவான்’ என்ற பழமொழி இவன் விசயத்தில் உண்மையானது.
-நவீன் குமார்.