தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22-ம் தேதி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு உத்தரவுப்படி மே 28-ம் தேதி ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.
அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஆலையைத் திறக்க கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி உத்தரவிட்டது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உடனே அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை நீதிபதிகள் ஆர்.பாலி நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளும் இந்த மனுக்களோடு சேர்த்து விசாரிக்கப்பட்டன. இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் வாதம் கடந்த 7-ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின்படி ஆலையைத் திறக்க அனுமதி வழங்கிய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அத்துடன், ‘ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை’ என்று தெரிவித்தனர்.
மேலும், ”இதுதொடர்பாக தமிழக அரசும், வேதாந்தா நிறுவனமும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகித் தீர்வு பெற்றுக்கொள்ளலாம்” என்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்முனைப்போடும், தைரியத்தோடும், சட்டப் போராட்டத்தில் ஈடுப்பட்ட வைகோவின் அர்பணிப்பு உண்மையிலுமே பாராட்டத்தக்கது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com