சேலம் மாவட்டம், ஏற்காடு, செம்மநத்தம் கிராமத்தில் வள்ளுவர் நகரை ஒட்டி அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் விவசாயம் செய்து வந்த நிலையில், அங்கு அரசின் நலத்திட்டத்திற்கான கட்டிடங்கள் வர வேண்டும் என்று வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், இரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்படா வண்ணம், அரசு சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரச்சனைக்குரிய அந்த நிலத்தில் மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு, மீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பங்குனி உத்திரத்திற்கு 4 நாட்கள் முன்னர் அந்த பிரச்சனைக்குரிய நிலத்தில் உள்ள ஆராத்தி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம் என கூறி, நேற்று ஒரு தரப்பினர் அங்கு வந்தனர். அங்குள்ள கோவிலில் தோரணங்கள் கட்டி வழிபாட்டிற்கு தயாராகினர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன், மக்களை தடுத்து நிறுத்தி, பிரச்சனைக்குரிய நிலத்தில் அரசின் தடை இருப்பதால், வழிபாடு நடத்தக்கூடாது எனவும், தேர்தல் சமயம் என்பதால் பின்னர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-நவீன்குமார்.