தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறவிருக்கும் இந்திய பாராளுமன்றத்தேர்தலில் திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக காலணி-Chappals (செருப்பு) சின்னத்தில் களமிறங்கியுள்ள Dr.துரைபெஞ்சமின் உடல் உழைப்பின் மூலம் மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழகத்தில் போதிய மழை பெய்யாததாலும், கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததாலும், 1876 ஆம் ஆண்டிற்கு பிறகு, கடந்த 140 ஆண்டுகளில் இதுவரை எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கடுமையான வறட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக (100 நாள்) வேலை மற்றும் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அத்யாவசிய பொருட்களை கொண்டுதான் அவர்கள் உண்மையிலுமே உயிர் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆற்றாங்கரையோர கிராமங்களில் வசிக்கும் வேலையில்லா இளைஞர்கள் மற்றும் 40 வயதிற்குட்பட்ட விவசாய கூலித்தொழிலாளர்கள் உடல் உழைப்பின் மூலம் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கும் வேலைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு மாட்டு வண்டியில் இரண்டு அல்லது மூன்று நடை மட்டும்தான் மணல் அள்ள முடியும். அதற்கு மேல் அவர்கள் கடுமையாக முயற்சித்தால் கூட மாடு ஒத்துழைக்காது. இவர்கள் மாட்டு வண்டிகளில் ஏற்றிச் செல்லும் மணல் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் மக்களின் தேவைக்காக மட்டும்தான் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு மாட்டு வண்டி மணல் சாதாரணத் தருணங்களில் ரூ.1000 முதல் ரூ.1500 வரையும், லாரிகள் வேலை நிறுத்தம் மற்றும் மணல் தட்டுப்பாடு உள்ள தருணங்களில் ரூ.2000 முதல் ரூ.2500 வரையும் விற்பனையாகிறது. பல கிராமங்களில் ஆற்றுக்குள் மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வதற்கு போதிய பாதை வசதி இல்லாததால் பெரும்பாலும் கூலி ஆட்களைக் கொண்டுதான் மணலை தலையில் தூக்கி வந்து மாட்டு வண்டியில் கொட்டுக்கின்றனர்.
இதனால் கிடைக்கும் வருமானத்தில் பாதியளவு கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டியுள்ளது.மே லும், ஒரு ஜோடி காளை மாட்டுக்கு வைக்கோல், புண்ணாக்கு, தீவனம், அதற்கான வைத்தியச் செலவு, மணல் அள்ளினாலும், அள்ளாவிட்டாலும், வேலை இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு சுமார் ரூ.1500 செலவாகிறது. மேலும், வண்டி மாடுகள் வாங்கியதற்கான கடன் மற்றும் அதற்கான வட்டி தொகைகள், இதுத்தவிர மாட்டு வண்டி ஓட்டும் நபர்கள் பெரும்பாலும் டீ, காபி, வெற்றிலை, பாக்கு மற்றும் மாலை நேரங்களில் மதுப்பழக்கம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த செலவினங்கள் எல்லாம் போக மீதமுள்ள தொகைதான் அவர்களின் குடும்பத்திற்கு போய் சேருகிறது. இதில் ஒரு நாள் வண்டி ஓட்டவில்லை என்றாலும், அவர்கள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது.
இப்படி தினந்தோறும் செத்துப் பிழைக்கும் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கும் அப்பாவி கிராமப்புற இளைஞர்களையும், விவசாய கூலித்தொழிலாளர்களையும், சட்ட விரோதமாக மிரட்டி அச்சுறுத்தி தனிப்பட்ட ஆதாயத்திற்காக பணம் பறிக்கும் வேலைகளில் காவல்துறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உள்ளூர் கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர்.
மாமுல் கொடுக்கவில்லை என்றால், மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவதாக கடுமையாக மிரட்டி, ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.5,000 முதல் 15,000 வரை கட்டாய வசூல் செய்கின்றனர். வசூல் செய்யப்படும் தொகைக்கு எந்த ரசீதும் வழங்குவதில்லை. எந்தெந்த கிராமங்களில் யார், யார் மணல் வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை கண்காணிப்பதற்கும், அவர்களிடமிருந்து மாமுல் வசூலித்து கொடுப்பதற்கும், அதற்கான ஏஜென்டுகளையும், கட்டப்பஞ்சாயத்துகாரர்ககளையும் அதிகாரிகளே நியமித்துள்ளனர்.
எனவே, இதுப்போன்ற நபர்களிடமிருந்து கிராமப்புற இளைஞர்களையும், விவசாய கூலித்தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும். மேலும், உடல் உழைப்பின் மூலம் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கும் கிராமப்புற இளைஞர்களையும், விவசாய கூலித்தொழிலாளர்களையும் எந்த தொந்தரவும் செய்ய வேண்டாம் என்று, காவல்துறை, வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உடனே உத்தரவிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் மாட்டு வண்டி வைத்துள்ள அனைவரும், கடந்த ஒரு மாத காலமாக பொருளாதார ரீதியாக மிகப் பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு சிலர் மாடுகளுக்கு புண்ணாக்கு மற்றும் தீவனம் வாங்க கூட பணமில்லாமல் மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்று வருகின்றனர்.
நவீன யுக்திகளை கையாண்டு மணல் விற்பனையில் சீர்திருத்தங்ளை செய்து “ஆன்லைன்” மூலம் மணல் விற்பனை செய்து முறைக்கேடுகளை தடுத்து வருவதாக சொல்லும் தமிழக அரசு, மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதற்கு எழுத்துப்பூர்வமான அனுமதி வழங்கி, அதற்கான உரிய கட்டணத்தையும் நிர்ணயம் செய்து, அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ, வங்கி அல்லது கருவூலத்தின் மூலமாகவோ செலுத்துவதற்கு வழிவகை செய்தால், அதை மனமகிழ்ச்சியோடு செலுத்துவதற்கு மாட்டு வண்டிக்காரர்கள் அனைவரும் தயாராகவே உள்ளனர். இதனால் தமிழக அரசுக்கும் வருவாய் கிடைக்கும். மாட்டு வண்டி தொழிலாளர்களும் நிம்மதியடைவார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான வண்டி மாடுகளும் நிம்மதியாக உயிர் வாழும், கிராமப்புற மக்களின் பொருளாதாரமும் மேம்படும்.
மேலும், கட்டுமானப் பொருட்களின் விற்பனையும், உள்ளூர் கட்டுமானப் பணிகளும் தொய்வில்லாமல் நடக்கும். தினக்கூலியாக வேலைப்பார்க்கும் லட்சக்கணக்கான கட்டிடத் தொழிலாளர்களுக்கு தடையில்லாமல் தொடர்ந்து வேலையும் கிடைக்கும்.
இவ்வாறு Dr.துரைபெஞ்சமின் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-கே.பி.சுகுமார்.