கடந்த மாதம் ஏப்ரல் 18 ந்தேதி பாராளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைப்பெற்றது. இதில் தொகுதி எண்:24, திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதிக்கான வாக்கு பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும், திருச்சி பஞ்சப்பூர் அருகில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் பலத்தப் போலிஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலிசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், வேட்பாளர்களின் முகவர்கள் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவருமான சு.சிவராசு தலைமையில், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முதன்மை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இதில் நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஊடகத்தின் ஆசிரியரும், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை தொகுதி சுயேட்சை வேட்பாளருமான Dr.துரைபெஞ்சமின் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் நியமனம் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முதன்மை முகவர்களின் சந்தேகங்களுக்கு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தெளிவாக விளக்கமளித்தார்.
அதன் பின்னர் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முதன்மை முகவர்களுடன், திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் மையங்களை நேரில் சென்று பார்வையிட்ட திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு, அங்கு நடைப்பெற்றுவரும் பணிகளையும் ஆய்வு செய்தார். வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார். அப்போது உதவி தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் உடனிருந்தனர்.
-கே.பி.சுகுமார்.