திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோகுலநகா், 7-வது தெருவில் வசித்து வரும் தா்ணேந்திரன் (வயது 31) த.பெ. ஆனந்த் என்பவா் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த TN 50 B 7700 என்ற டவேரா காரை காணவில்லை என்று, 07.05.2019-ந் தேதி அன்று கொடுத்த புகாரின் பேரிலும், அதே கோகுலநகரில் 8-வது தெருவில் வசித்து வரும் விஜயமோகன் (வயது 42) த.பெ. தியாகராஜன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து டிவி மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடி விட்டதாக கொடுத்த புகாரின் பேரிலும், திருவெறும்பூர் போலிசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில், திருவெறும்பூா் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது செல்வகார்த்தி (வயது 32), த.பெ. கல்யாணசுந்தரம், அக்ரஹாரம், திருவையாறு என்ற முகவரியை சேர்ந்த நபரும், தமிழ்செல்வன் (வயது 29), த.பெ. அன்பழகன், சிவராமபுரம், நாகை மாவட்டம் என்ற முகவரியை சேர்ந்த நபரும் மற்றும் ஆனந்த் (எ) ஆனந்தன் (வயது 39), த.பெ. குணசேகரன், பெருகவளந்தான், திருவாரூா் மாவட்டம் என்ற முகவரியை சேர்ந்த நபரும் மேற்படி திருட்டில் சம்பந்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த மூவரையும் திருவெறும்பூர் போலிசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்து திருவெறும்பூா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, 11.05.2019-ந் தேதி இரவு நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் வாணியம்பாடியில் இருந்து குவாலிஸ் காரை திருடி, அந்த காரை திருட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த குவாலிஸ் காரையும் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் தொடா்ந்து பல மாவட்டங்களில் கார் திருடியுள்ளதும், கடை மற்றும் வீடுகளில் களவு செய்துள்ளதும், போலிஸ் விசாரணையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
மேலும், இவா்கள் மீது தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டிணம் மற்றும் கடலூா் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது, போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
‘பலநாள் திருடன் ஒரு நாள் வசமாக சிக்குவான்’ என்ற நமது முன்னோர்களின் அனுபவ மொழி, இந்த திருடர்கள் விசியத்தில் உண்மையாகிவிட்டது.
-ஆர்.சிராசுதீன்.