இலங்கையில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிறகு, பாதுகாப்பு துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் இலங்கை அரசாங்கம் செய்து வருகிறது.
அந்த வகையில், இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் முப்படைத் தளபதிகள், அனைத்து கட்சி தலைவர்கள், சர்வ சமய மதத்தலைவர்கள் மற்றும் அனைத்து துறைச் சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளடக்கிய ஆலோசனைக் குழு ஒன்றை, இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாதுகாப்பு குழு மாதந்தோறும் கூடி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் செயற்பாடுகளின் நம்பகத்தன்மை குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், முதலாவது பாதுகாப்பு கூட்டம் இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது தொடர்பிலும், ஆயுதங்கள் உள்ளிட்ட யுத்த உபகரணங்கள் கிடைப்பது தொடர்பிலும் ஆழமாக ஆராய்வதற்கு விரிவான விசாரணைகள் அவசியம் என்று கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
மேலும், போலியான செய்திகளை தவிர்க்க புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று, தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அசங்க அபேகுணசேகர கருத்துத் தெரிவித்தார்.
-என்.வசந்த ராகவன்.