மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீது வெளிப்படையாகவும், மறைமுகமாகவும், அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் மற்றும் தனிப்பட்ட முறையிலும் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அரசியலில் அவர் கடைசிவரை அசைக்க முடியாத சக்தியாக இருந்து அஇஅதிமுக என்ற மாபெரும் அரசியல் கட்சியை கட்டுகோப்பாக வழி நடத்தினார்.
அவர் சுய நினைவோடு, அவர் நட உடையாக இருந்தவரை, யாரை எங்கு வைக்க வேண்டும், யாரை எப்படி வழிநடத்த வேண்டும், யாருக்கு என்ன பதவி வழங்க வேண்டும், யார் பதவியை எப்போது பறிக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக உணர்ந்து செயல்பட்டு வந்தார்.
யார் யார் விசுவாசமாக இருக்கிறார்கள், யார் யார் தன்னிடம் நடிக்கிறார்கள், நாடகமாடுகிறார்கள் என்பது உள்பட அனைத்தும் அவருக்கு அத்துப்படியாக தெரியும்.
ஆட விட்டு வேடிக்கைப் பார்ப்பது, அத்துமீறும்போது தூக்கி எறிவது என்பது, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கு கை வந்த கலை.
அரசியல் வட்டாரத்தில் அவரை பற்றி அறியாதவர்கள் பேசிக்கொள்வதைபோல, மற்றவர்களின் சொல்பேச்சை கேட்டு முடிவு எடுப்பரல்ல ஜெ.ஜெயலலிதா.
நாள் முழுக்க காலில் இருக்கிறது என்பதற்காக செருப்பை பூஜையில் வைக்க முடியாது! எப்போதாவதுதான் பயன்படுகிறது என்பதற்காக குங்குமத்தை காலில் போட்டு மிதிக்க முடியாது!- என்பதை ஜெ.ஜெயலலிதா மிக தெளிவாக தெரிந்து வைத்திருந்த காரணத்தால்தான், அரசியலில் அவரால் காலம் தள்ள முடிந்தது.
12 பேர்களில் ஒருவனாக இருக்கும் யூதாஸ்தான் தன்னை காட்டி கொடுப்பான் என்று தெரிந்தும், எப்படி ஏசு தெளிவாக அவர்களோடு இருந்தாரோ! அதே போலதான் ஜெ.ஜெயலலிதாவும் துரோகிகளோடே அவரும் வாழ்ந்தார்.
பாம்புகளை பராமரிப்பவன் பாம்பு விஷத்திற்கு பலியாவதை போல, சிங்கங்களை பராமரிப்பவன் சிங்கத்தின் வாயிக்கு இரையாவதைபோல, யானைகளின் பாகன் யானை காலடியில் பலியாவதை போல, ஜெ.ஜெயலலிதாவும் துரோகிகளிடம் பலியாகி போனார். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருந்த ஜெ.ஜெயலலிதா! துரோகிகளிடம் தோற்று போனார்.
ஆம், எதிரிகள் என்றைக்கும் எதிரிகள்தான்; ஆனால், அடிக்கடி பரிசோதனைக்கு உட்பட வேண்டியது உறவுகளும், நட்புகளுமே!
ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கும், ஒரு மனிதன் எப்படி வாழ கூடாது என்பதற்கும் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை மிக பெரிய உதாரணம்.
ஜெ.ஜெயலலிதாவிடம் இருந்த ஆளுமைப் பண்பும், அதிரடி முடிவுகளும், இன்றைய அதிமுக தலைமையிடம் கடுகளவும் இல்லை. அவ்வளவு ஏன் இங்கு யார் தலைமையில் செயல்படுவது என்பதே ஒட்டுமொத்த குழப்பத்திற்கும் காரணமாக உள்ளது.
இதனால் ஜெ.ஜெயலலிதா தலைமையை இழந்த தொண்டர்கள், தாய் இல்லா குழந்தைகளைபோல தவித்து வருகின்றனர்.
இந்நிலை தொடர்ந்து நீடித்தால் அதிமுக என்ற கட்சி தமிழக காங்கிரசை போல உருமாறிவிடும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com