சென்னை சிறப்பு நீதிமன்ற வாயிலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது;
என் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான நாள். ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்துப் பேசியதற்காகவும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை தொடர்ந்து ஆதரித்து வருவதற்காகவும், சிறப்பு நீதிமன்றம் எனக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து இருப்பதை, மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்றேன்.
இந்திய அரசு ஆயுத உதவியும், பண உதவியும் செய்ததால், உலக நாடுகளிடம் ஆயுதம் வாங்கி, சிங்களப் பேரினவாத இராஜபக்சே அரசு, இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது என்பதை, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடம் நேரடியாகச் சென்று, கோரிக்கை மனு கொடுத்தேன். 17 முறை சந்தித்து இருக்கின்றேன். கடிதங்கள் எழுதி இருக்கின்றேன்.
அந்தக் கடிதங்களைத் தொகுத்து, ‘I Accuse’ என்ற தலைப்பில், இராஜா அண்ணாமலை மன்றத்தில் நூலாக வெளியிட்டோம். அந்த விழாவில் பேசியதற்காக, என் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
ஆமாம்; நான் அப்படித்தான் பேசினேன்; இளைஞர்களைத் திரட்டிக் கொண்டு, ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தால் நாதி இல்லை என்று ஆகி விடாது; இளைஞர்கள், இங்கிருந்து ஆயுதம் ஏந்திச் சென்று போராடவும் ஆயத்தமாக இருப்பார்கள்; நான் அதற்குத் தலைமை ஏற்றுச் செல்வேன்;
அன்று அந்த வழக்கை கூடுதல் அமர்வு நீதிமன்றம் (மூன்றாவது செசன்ஸ் கோர்ட்) விசாரித்தது.
‘நீங்கள் இப்படிப் பேசினீர்களா?’ என்று நீதிபதி கேட்டார்.
‘ஆமாம் பேசினேன். ஈழத்தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என்று பேசினேன். அவர்கள் நாதி அற்றுப் போக மாட்டார்கள்’ என்று சொன்னேன்.
இங்கிருந்து இளைஞர்களைத் திரட்டிக்கொண்டு போவேன் என்று சொன்னீர்களா?
ஆமாம்.
ஆயுதம் ஏந்திச் செல்வோம் என்று பேசினீர்களா?
ஆமாம்.
என்று சொன்னேன்.
அந்த வழக்கில் இருந்து நான் விடுதலை செய்யப்பட்டேன்.
அதன்பிறகு அந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து குற்றம் சாட்டுகிறேன் என்ற தலைப்பில், 2009 ஜூலை 15 ஆம் நாள் இராணி சீதை அரங்கில் வெளியிட்டோம்.
அண்ணன் பழ. நெடுமாறன் அவர்கள் வெளியிட, மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
நான் இராஜா அண்ணாமலை மன்றத்தில் பேசிய அதே விதத்தில்தான் இந்த விழாவிலும் பேசினேன். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும், நான் பிரதமரிடம் நேரடியாகக் கொடுத்தவை. அதன் தொகுப்புதான், குற்றம் சாட்டுகிறேன் என்ற இந்த நூல். இது எல்லோருக்கும் தெரியும். அதற்காக என் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக, தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இப்படிப் பேசினீர்களா? என்று நீதிபதி கேட்டார். ஆமாம்; நான் பேசினேன். நான் பேசிய எதையும் நான் மறுக்கவில்லை.
இந்திய ஒருமைப்பாடு சிதைந்து விடக் கூடாது; இந்திய இறையாண்மை சிதைந்து விடக் கூடாது; இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகப் பேசினேன். அரசின் போக்கு இப்படியே நீடித்தால், ஒருமைப்பாடு நீடிக்காது. இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் பேசினேன்.
ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை, அவர்களுக்காகப் போராடுகின்ற விடுதலைப்புலிகளைப் பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் பேசினேன்.
விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன்; இன்றும் ஆதரிக்கின்றேன்; நாளையும் ஆதரிப்பேன் என்று சொன்னேன். அதற்காக, பொடா சட்டத்தின் கீழ், 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியது குற்றமா? என்று கேட்டு, வேலூர் சிறையில் இருந்தவாறே, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தேன்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது மட்டுமே குற்றம் ஆகிவிடாது என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
25 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் எங்கள் கட்சியைப் பாதுகாத்து வருகின்ற, அடுக்கடுக்கான வழக்குகளின் தாக்குதலில் இருந்து தடுத்து எங்களைக் காத்து வருகின்ற எங்கள் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், இந்த வழக்கையும் நடத்தினார்.
இன்றைக்குத் தீர்ப்பு நாள்.
சிறப்பு நீதிபதி அவர்கள், ‘நீங்கள் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கின்றேன். தண்டனை குறித்து எதுவும் சொல்ல விரும்புகின்றீர்களா? என்று கேட்டார்.
‘தண்டனையை இன்றே அறிவித்து விட்டால் நல்லது’ என்று சொன்னேன்.
ஓராண்டு சிறைத்தண்டனை; 10000 ரூபாய் அபராதம் என்று சொன்னார்.
தீர்ப்பை வாங்கி வாசித்துப் பார்த்தோம். வழக்கறிஞர் நன்மாறன் அவர்களும், வழக்கறிஞர் தேவதாஸ் அவர்களும், Accused sought for lienient punishment என்று நீதிபதி எழுதி இருந்தார். அதாவது குறைந்த தண்டனை கொடுக்க வேண்டும என்று குற்றம் சாட்டப்பட்ட வைகோ கேட்டுக்கொண்டதாக எழுதி இருந்தார்.
அதைக் கேட்டு, என் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. நான் நீதிபதியைப் பார்த்துக் கேட்டேன். தண்டனையைக் குறைக்கச் சொல்லி நான் ஒருபோதும் கேட்கவில்லை. அதிகபட்சம் ஆயுள் தண்டனை கொடுங்கள் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், நான் சொல்லாத வார்த்தையை, குறைந்தபட்ச தண்டனை வேண்டும் என்று நான் கேட்காததை, இந்தத் தீர்ப்பில் எழுத வேண்டும் என்றால், நீதிபதியின் உள்ளத்தில் விஷம் இருக்கின்றது. unless there is venom in the mind of the judge, such an atrocious sentence would not have been included in the judgment என இரண்டு தடவை சொன்னேன். நீதிபதியின் உள்ளத்தில் நஞ்சும், விஷமும் இல்லாவிட்டால், இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. எவ்வளவு தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்; ஏற்றுக் கொள்கின்றேன்; ஆயுள் தண்டனையா? ஏற்றுக் கொள்கின்றேன்.
விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்ற எண்ணத்தைத் தொடர்ந்து இளைஞர்களிடம் விதைத்துக் கொண்டு இருப்பதனால், இந்தத் தண்டனை அளிப்பதாகத் தீர்ப்பில் நீதிபதி எழுதி இருக்கின்றார்.
ஆம்; விதைப்பேன்; விதைத்துக் கொண்டே இருப்பேன். பேசுவேன்; ஆயுள் தண்டனை என்றாலும், மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன். நான் தந்தை பெரியார் வழியில் வந்தவன். 1938 ஆம் ஆண்டு, இதே சென்னை நீதிமன்றத்தில், தந்தை பெரியாருக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு முன்பு அவர் நீதிபதியைப் பார்த்து, ‘அதிகபட்ச தண்டனை எதுவோ, அதைக் கொடுங்கள் என்று கேட்டார். தீர்ப்பைக் கேட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியோடு, மூன்று வருடம், மூன்று வருடம் என்று சத்தம் போட்டுக்கொண்டே சென்றார் என நான் படித்து இருக்கின்றேன்.
நான் அந்த வழியில் வந்தவன். ஆயுள் தண்டனை என்றாலும், மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்றேன். 38 இல் தந்தை பெரியார் சொன்னார்; அதைத்தான், பெரியாரின் பேரன் வைகோ இன்றைக்கு நீதிமன்றத்தில் சொல்லி இருக்கின்றேன். நான் பேசியது தேசத்துரோகம் அல்ல; இது தேசத்துரோகம் என்றால், இதை நான் தொடர்ந்து செய்துகொண்டு இருப்பேன்.
இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com