வரலாற்றில் இடம்பிடித்த “தமிழ் மறவன்” வண்ணத்துப் பூச்சி!

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி அடையாளச் சின்னங்கள் உள்ளன. அது போல் இந்தியாவிற்கு என பல தேசியச் சின்னங்கள் இருக்கின்றன. இவை தவிர ஒவ்வொரு மாநிலத்திற்கும் பல்வேறு அடையாளச் சின்னங்கள் இருப்பதை நாம் அறிவோம். தமிழ்நாட்டிற்கு என பல அடையாளச் சினங்னங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் ஒரு அடையாளச் சின்னத்தை தமிழக அரசு 2019 ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று அறிவித்துள்ளது. தமிழ் மறவன் எனப்படும் வண்ணத்துப் பூச்சியைதான் தமிழ்நாட்டின் மாநில பட்டாம் பூச்சியாக அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

இந்திய அளவில் வண்ணத்துப் பூச்சிகளுக்கு மாநில அந்தஸ்து வழங்கிய மாநிலங்கள் 4 மட்டுமே. முதன் முதலாக மகாராஷ்டிரா மாநிலம் ப்ளூ மோர்மன் (Blue Mormon) என்னும் வண்ணத்துப் பூச்சியை தனது மாநில பட்டாம் பூச்சியாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து உத்ராகாண்ட் மாநிலம் காமன் பீகாக் (Common Peacock), கர்நாடக மாநிலம் சதர்ன் பேர்டு விங்ஸ் (Southern bird wings) மற்றும் கேரள மாநிலம் மலபார் பேண்டட் பீகாக் (Malabar banded peacock) என வண்ணத்துப் பூச்சிகளுக்கு அங்கீகாரம் அளித்தன. தற்போது ஐந்தாவது மாநிலமாக தமிழ்நாடும் பட்டாம் பூச்சிக்கு அங்கீகாரம் கொடுத்து தமிழ் மறவன் என்னும் பட்டாம் பூச்சியினை மாநில சின்னமாக அறிவித்துள்ளது.

வண்ணத்துப் பூச்சியை அடையாளம் காண்பதற்காக 10 பேர் அடங்கிய நிபுணர்கள் இதில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் 312 இன வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாகப் பட்டியல் இட்டுள்ளனர். இவற்றில் 32 வண்ணத்துப் பூச்சிகள் மேற்கு மலைத் தொடர்களில் வசிக்கின்றன. மேற்கு மலைத் தொடரில் வாழக்கூடிய குறிப்பிட்ட இடம் வாழ் (Endemic) பட்டாம் பூச்சியை மாநில பட்டாம் பூச்சியாக தேர்வு செய்தனர். பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட வண்ணத்துப் பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றில் இரண்டை மட்டும் தேர்ந்தெடுத்தனர். அவை தமிழ் இயோமேன் (Tamil Yeoman) மற்றும் தமிழ் லேஸ்விங் (Tamil Lacewing) ஆகும். இறுதியாக தமிழ் இயோமேன் என்னும் வண்ணத்துப் பூச்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. அதாவது அது தமிழ் மறவன் (Tamizh Maravan) என்னும் பட்டாம் பூச்சியாகும்.

பத்து பேர் அடங்கிய நிபுணர் குழுவில் மோகன் பிரசாத்  (Mohan Prasath) என்பவரும் இடம் பெற்றிருந்தார். இவர் வண்ணத்துப் பூச்சி ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் தமிழ் இயோமேன் மற்றும் தமிழ் லேஸ்விங் ஆகிய இரண்டு இனங்கள் பற்றி பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். இவை இரண்டும் அரிதானவை மற்றும் குறிப்பிட்ட இடம் வாழ் உயிரினங்கள் ஆகும். லேஸ்விங் வண்ணத்துப் பூச்சி மிகவும் அரிதானது. இதை காண்பது அரிது. இயோமேன் பட்டாம் பூச்சி அரிது என்றாலும் சில இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூட்டமாக காணப்படும்.

இந்த இரண்டு இன வண்ணத்துப் பூச்சிகளுக்கும் தமிழ் என மொழி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் இயோமேன் அதிவேகமாகப் பறந்து செல்லும் ஆற்றல் கொண்டது. மேலும் தென் இந்தியாவில் காணப்படும் மிக அழகிய வண்ணத்துப் பூச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

அதுதவிர தமிழ் கலாச்சாரம் மற்றும் வீரம் ஆகியவற்றைப் போற்றும் வகையில் இதன் பெயர் அமைந்துள்ளது. இப்படி ஏராளமான சிறப்பம்சங்களை இந்த வண்ணத்துப்பூச்சி கொண்டிருக்கிறது. இந்த அம்சங்களின் அடிப்டையில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சியை நிபுணர்கள் தேர்ந்தெடுத்தனர்.

இந்த வண்ணத்துப் பூச்சியின் ஆங்கிலப் பெயர் இயோமேன் என்பதாகும். இதன் விலங்கியல் பெயர் சிர்ரோசோர்ரா தையஸ் (Cirrochroa thais). தமிழ்மறவன் என்றால் போர்வீரன் (Warrior) எனப் பொருள்படும். இவை ஈரப்பதம் நிறைந்த, பசுமையான வனப்பகுதி மற்றும் நீரோடைகளின் ஓரங்களிலும் வாழ்கிறது. மேற்கு தொடர்ச்சி  மலைகளில் மட்டுமே காணப்படும். நீலகிரியைப் பொருத்தவரை முதுமலை புலிகள் காப்பகம், குன்னூர், கூடலூர் போன்ற இடங்களிலும் இவை வாழ்கின்றன. குறிப்பாக மலைபாங்கான பகுதிகளில் இதனைக் காணலாம்.

இந்த வண்ணத்துப் பூச்சிகள் 6 முதல் 7.5 செ.மீ நீளம் வரை வளரக் கூடியது. அதாவது விரிந்த நிலையில் இந்த அளவு நீளம் கொண்டிருக்கும். இவை சிக வேகமாகவும், நேராகவும் பறக்கும். ஒரு சில இறக்கை அசைவிலேயே மிக நீண்ட தூரம் பறக்கும் திறன் படைத்தவை. ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு கூட்டமாக இடம் பெயரும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இவை ஆரஞ்சு மற்றும் அடர்ந்த காப்பி நிறத்தில் இருக்கும். ஆண் மற்றும் பெண் ஆகியவற்றின் சிறகுகளில் சிறு சிறு வேறுபாடுகள் உள்ளன. அதேபோல் நிறத்திலும் சிறிய வேறுபாடுகள் தென்படும்.

இந்த வண்ணத்துப் பூச்சிகள் 8 முதல் 10 முட்டைகளை இடும். இவை செங்குத்தாக, பின்னப்பட்ட சங்கிலி வடிவத்தில் இருக்கும். முட்டைகளை இலையின் அடிப்பகுதி மற்றும் மறைவான பகுதியிலேயே இடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவந்த புழுக்கள் துளிர் இலைகளின் விளிம்புகளை உண்கின்றன.

மூன்று ஆண்டுகள் தொடர்ந்த ஆய்வின் பலனாக தமிழ் மறவன் பட்டாம் பூச்சி மாநில அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. தமிழ் மறவன் பட்டாம் பூச்சிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தலைமை வன உயிரின பாதுகாவலர் மற்றும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஆகியோர் மாநில அரசுக்கு பரிந்துரை செய்தனர். அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. உடனே சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் இதற்கான அரசாணையை பிறப்பித்தார்.

 -ஏற்காடு இளங்கோ,

 அறிவியல் எழுத்தாளர்.

 

 

 

 

 

Leave a Reply