தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 25) காலை 10-மணிக்கு பலத்தப்பாதுகாப்புடன் தொடங்கியது. காவலர் பதவிக்கான பொதுத் தேர்வை முன்னிட்டு இன்று காலை முதலே தேர்வு மையங்களில் கூட்டம் அலைமோதியது.
இரண்டாம் நிலை காவலர் ( சிறப்புக் காவல் படை) ஆண்கள் பிரிவில் 5,962 பணியிடங்களுக்கும், பெண் காவலர்கள், திருநங்கைகள் (மாவட்ட/ மாநகர் ஆயுதப் படை) பிரிவில் 2,465 பணியிடங்களும், இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு ஆண்கள்-186, பெண்கள்-22 என 208 பணியிடங்களும் காலியாக உள்ளன. மேலும், தீயணைப்பாளர் பணிக்கு 191 இடங்கள் என தமிழ்நாடு காவல் துறையில் மொத்தம் 8,826 காலிப் பணியிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காகக் கடந்த மார்ச் மாதம் தேர்வு அறிவிப்பு வெளியானது. தேர்வு எழுதுபவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டு (Exam Hall Ticket) கடந்த 13 ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 228 மையங்களில் தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வில், சுமார் 44 ஆயிரம் பெண்கள் உட்பட 3.15 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கின்றனர். இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு 11.20 மணி வரை நடைபெறும்.
காவலர் பதவிக்கான பொதுத் தேர்வை முன்னிட்டு, தமிழகம் முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரிகள் தயார் செய்யப்பட்டு, காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com