ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரத்தை, மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்ற அந்த நிமிடத்தில் இருந்து இந்தியாவில் உள்ள அச்சு, காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் அனைத்திலும், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், சிவகங்கை மக்களவை உறுப்பினருமான கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோரின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் குறித்து எந்தவித ஆதாரமும் இன்றி யூகங்களின் அடிப்படையில் பல்வேறு வதந்திகளை செய்திகளாக வெளியிடப்பட்டு வருகின்றன. இது நாட்டு மக்கள் மத்தியில் மிகபெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று, நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் ஆகஸ்ட் 24-ந்தேதி அதிகாலை செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அதில், ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் குறித்தும், அவர்களுக்கு உள்ள கடன் விபரங்கள் குறித்தும், 2009, 2014, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில், இந்திய தேர்தல் ஆணையத்திடம் அவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு தாக்கல் செய்த உண்மையான சொத்து மற்றும் கடன் விபரங்களை நமது வாசகர்களின் பார்வைக்காக பதிவு செய்து இருந்தோம்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்கள் சரிபார்க்காத மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதை கண்டு நாங்கள் வேதனை அடைகிறோம்.
ப.சிதம்பரத்தை அவமானப்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தபோதிலும் இந்த விவகாரத்தில், அவதூறுகளுக்கு எதிராக உண்மையை தூக்கி பிடிக்க ஊடகங்கள் தவறிவிட்டன என்பதை நினைத்து மிகுந்த வருத்தப்படுகிறோம்.
நீதி மன்றத்தில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படாதவரை ஒவ்வொரு நபரும் நிரபராதிதான் என்பது உரிமைக்கான அடிப்படை கொள்கைகளில் ஒன்றாகும்.
இந்த விவகாரத்தில் இறுதியில், உண்மை ஜெயிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ப.சிதம்பரம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருந்து வருகிறார். இழிவுபடுத்தும் பிரசாரத்தின் மூலம் அவரது நேர்மை, உழைப்பு, நாட்டுக்கான பங்களிப்பு ஆகியவற்றை அழிக்க முடியாது.
நாங்கள் போதுமான செல்வத்தை கொண்ட சிறிய குடும்பம். நாங்கள் அனைவரும் வருமான வரி செலுத்துபவர்கள். நாங்கள் பணத்திற்காக ஏங்குவதில்லை. சட்டவிரோதமான வழிகளில் பணம் தேட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எனவே, பல நாடுகளில் உள்ள சொத்துகள், பல வங்கி கணக்குகள், ஏராளமான போலி நிறுவனங்கள் போன்றவற்றின் குற்றச்சாட்டுகளால் நாங்கள் அதிர்ந்து போய் உள்ளோம்.
இவையெல்லாம் பேய் கதைகளின் அத்தியாயங்கள். ஒரு நாள் இந்த பேய்கள் புதைக்கப்படும். உலகின் எந்த பகுதியிலும் வெளியில் தெரியாமல் வங்கி கணக்கோ, சொத்துகளோ அல்லது போலி நிறுவனமோ இருப்பதாக மத்திய அரசு சிறிய ஆதாரத்தை கூட வெளியிட முடியாது என்று சவால் விடுகிறோம்.
எனவே, சட்ட விதிகள் மட்டுமே நம்மை பாதுகாக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொண்டு ஊடகங்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்து உரிமையையும், கண்ணியத்தையும் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
இது சம்மந்தமான முந்தைய செய்திகளுக்கு கீழ் காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
(Soththu visayathil), pothum endra manamae pon seiyum marunthu, endru PA. CHITAMBARAM kudumbaththargal solkinranar polum, antho pavam