காயமடைந்த மாட்டிற்கு சிகிச்சையளிக்க கட்டுத் துணி வாங்கி வரவேண்டும்!-கீழமுல்லக்குடி அரசு கால்நடை மருந்தகத்தின் அவல நிலை.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கீழமுல்லக்குடி ஊராட்சி, காந்திபுரம் கிராமத்தில் அரசு கால்நடை மருந்தகம் ஒன்று உள்ளது.

இந்த கால்நடை மருந்தகத்திற்கு புத்தாபுரம், காந்திபுரம், ஒட்டக்குடி, புத்தர்நகர், வளன்நகர், கீழமுல்லக்குடி மற்றும் சர்க்கார்பாளையம், பனையக்குறிச்சி ஆகிய கிராமங்களில் இருந்து கால்நடைகளை ஓட்டிக்கொண்டு சிகிச்சைக்காக வருகின்றனர்.

மேற்காணும் கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட காளை மற்றும் வண்டி மாடுகள், 600-க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் மற்றும் கன்றுகள், ஆயிரக்கணக்காண ஆடு மற்றும் கோழிகள் உள்ளன.

விவசாய தொழில் நலிவடைந்துபோனதால், கால்நடைகளை நம்பிதான் இக்கிராம மக்கள் காலம் தள்ளி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (02.09.2019) காலை காந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் செந்தில்குமார் என்பவரின் வண்டி மாடுகள் திடீரென ஒன்றோடு ஒன்று முட்டி கொண்டதில், அதில் ஒரு மாட்டிற்கு கொம்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்த இளைஞர்கள், கொம்பு பகுதியில் காயமடைந்த மாட்டை  அருகில் இருந்த மேற்படி அரசு கால்நடை மருந்தகத்திற்கு சிகிச்சைக்காக ஓட்டிச் சென்றனர்.

ஆனால், அங்கு பணியில் இருந்த கால்நடை மருத்துவர் மாட்டின் காயத்திற்கு கட்டுபோட,  கட்டுத் துணி வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர்கள், கட்டுத் துணி வாங்கிவர வேண்டுமென்றால், இங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட்டுக்குதான் நாங்கள் போகவேண்டும். அதுவரை 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த வண்டி மாட்டின் நிலை என்னாவது? என்று கேட்டுள்ளனர்.

அதன் பிறகு வேறு வழியில்லாமல் அங்கு இருந்த பற்றாக் குறையான கட்டுத் துணியை கொண்டு மாட்டிற்கு கட்டுப்போட்டு அனுப்பியதோடு, நாளைக்கு மாட்டை ஓட்டிவரும்போது கட்டாயம் கட்டுத் துணி வாங்கி வரவேண்டும் என்று அங்கு பணியில் இருந்த கால்நடை மருத்துவர் எச்சரித்துள்ளார்.

உண்மையிலுமே இந்த அரசு கால்நடை மருந்தகத்தில் கட்டுத் துணி இல்லையா? (அல்லது) அந்த கால்நடை மருத்துவர் இப்படி கட்டாயப்படுத்துகிறாரா? இந்த அவல நிலைக்கு யார் காரணம்?

எனவே, சம்மந்தப்பட்ட தமிழ்நாடு அரசு கால்நடைத்துறை உயர் அதிகாரிகள் இந்த கால்நடை மருந்தகத்தை நேரில் ஆய்வு செய்து, போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து, வாயில்லா ஜீவன்களை வாழவைக்க வேண்டும்.

செய்வார்களா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.

-கே.பி.சுகுமார்.

 

One Response

  1. MANIMARAN September 3, 2019 11:26 pm

Leave a Reply