புற்றுநோய்க்கு மருந்தாகும் நெய் மிளகாய்!  

நெய் மிளகாய்.

உலகளவில் காரச் சுவையை கொடுக்கக் கூடியது மிளகாய் ஆகும். காரம் இல்லாத உணவை சாப்பிட முடியாது என்கிற நிலையில் மக்கள் இருக்கின்றனர். 17 ஆம் நூற்றாண்டில்தான் மிளகாய் இந்தியாவிற்கு வந்தது. அதற்கு முன்பாக மிளகு காரத்திற்காகப் பயன்படுத்தினோம். உண்ணக் கூடிய உணவிற்கு சுவை, மணம், நிறம் ஆகியவற்றைக் கொடுக்கிறது. மிளகாய் (Capsicum) என்பது காய்கறி பயிர்களில் மிக முக்கியமானது. இதை மொளகாய், முளகாய் என்றும் கிராமப்புறங்களில் அழைக்கின்றனர்.  இது சோலனேசி (Solanaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

மிளகாயில் 10 க்கும் குறைவான இனங்களே உள்ளன. ஆனால் சுமார் 50000 க்கும் மேற்பட்ட ரகங்கள் உலகம் முழுவதும் பயிர் செய்யப்படுகின்றன. மிகச் சிறியது முதல் 250 கிராம் எடை வரை உள்ள பெரிய மிளகாய் ரகங்களும் இருக்கின்றன. சிகப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, ஊதா, கருப்பு என பல்வேறு நிறங்களில் மிளகாய் கிடைக்கிறது. அது தவிர பல்வேறு வடிவங்களிலும் மிளகாய்கள் உள்ளன. காரமே இல்லாத இனிப்பு மிளகாய் முதல் மிக மிக அதிக காரம் கொண்ட மிளகாய்களும் பயிர் செய்யப்படுகின்றன. சில வகையான மிளகாய்ச் செடிகள் வீடுகளில் அழகிற்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. ஒயின் சுவை கொண்ட மிளகாய் மற்றும் நெய் வாசம் வீசக்கூடிய மிளகாய்களும் இருப்பது ஆச்சர்யமான செய்தி.

மிளகாய்க்கு காரத்தன்மையைக் கொடுப்பது கேப்சாய்சின் (Capsaicin) என்னும் வேதிப்பொருளாகும். இது மனிதர்கள் உள்பட பாலூட்டிகள் அனைத்திற்கும் ஒரு எரிச்சலை ஊட்டுகிறது. எந்த திசுக்களில் பட்டாலும் எரிச்சல் உணர்வை உருவாக்கிறது. மிளகாயில் காரமான பகுதி என்பது அதன் விதைகளில்தான் அதிகம் இருக்கிறது.

மசாலா போன்ற உணவுப் பொருட்களில் காரம் அல்லது கார்ப்புச் சுவையின் அளவைக் கண்டறிய ஸ்கோவில் வெப்ப அளவீடு (Scoville heat units – SHU) என்கிற முறை பின்பற்றப்படுகிறது. இதை ஸ்கோவில் அளவுகோல் (Scoville scale) என்கின்றனர். மிளகாய் மற்றும் மிளகு போன்றவற்றின் காரத்தன்மையை இந்த முறையில் அளவிடுகிறார்கள். வில்பர் ஸ்கோவில் (Wilbur scoville) (1865-1942) என்கிற அமெரிக்க விஞ்ஞானி 1912 ஆம் ஆண்டு மிளகாயில் உள்ள காரத்தை அளவீடு செய்தார். மிளகாயின் சாற்றில் உள்ள காரம் தெரியாத அளவு சர்க்கரைத் தண்ணீரை சேர்த்தார். பின்னர் சர்க்கரைத் தண்ணீரின் அளவினைக் கொண்டு காரத்தின் அளவை நிர்ணயித்தார். அதை ஸ்கோவில் அளவுகோல் என்கின்றனர். தற்போது இதைவிட மிக துல்லியமாக காரத்தை அளவிட திரவ நிறமாலையை (High performance Liquid Chromatography) பயன்படுத்துகின்றனர்.

மிளகாயில் இனிப்பு வகையும் உண்டு. அதாவது ஸ்கோவில் முறையில் 0 முதல் 1000 வரை காரத்தன்மை இருப்பதை இனிப்பு வகை என்கின்றனர். இதை அப்படியே சாப்பிடலாம். குடை மிளகாய், பிமென்டோ, இனிப்பு பனானா, மெக்ஸி குடை மிளகாய், செர்ரி குடை மிளகாய் ஆகியவை இனிப்பு வகையைச் சார்ந்தது.

காரத்தன்மை 1000 முதல் 3000 வரை இருப்பின் அது மிதமான கார வகை மிளகாய் ஆகும். அன்சோ, பசில்லா, எஸ்பனோலா, சண்டியா, கஸ்காபெல் போன்றவை இந்த வகையைச் சேர்ந்ததாகும். காரத்தன்மை 3000 முதல் 6000 வரை இருப்பதை இடைப்பட்ட கார மிளகாய் என்கின்றனர். இதற்கு உதாரணமாக அலபீனோ மற்றும் மியாசால் ஆகிய மிளகாய் வகைகளைக் கூறலாம்.

காரத்தன்மை 5000 முதல் 100000 வரை உள்ளதைக் கார மிளகாய் என்கின்றனர். செர்ரானோ, கயேன், டபாஸ்கோ, பிக்வின் மற்றும் தாய்லாந்து மிளகாய் ஆகியவை கார மிளகாய்க்கு உதாரணமாகும். இதற்கு மேல் 100000 முதல் 300000 வரை காரத்தன்மை கொண்டவைகளை ஆதீத கார மிளகாய் என்கின்றனர். ஆபெர்னரோ மற்றும் ஸ்காட்ச் பானெட்டு போன்றவை ஆதீத கார மிளகாய்களாகும்.

உலகிலேயே மிக காரமான மிளகாய்களை தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதிகமான காரம் என்பது 10 லட்சம் ஸ்கோவில் அலகைத் தாண்டியதாகும். உலகில் மிக காரமான மிளகாய் என்பது மாறிக்கொண்டே உள்ளது. கிட்டதட்ட காரம் அதிகரித்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மிக மிக அதிக காரம் கொண்ட மிளகாய் கண்டுபிடிக்கப்படுகிறது.

உலகளவில் அதிக காரத்தன்மை கொண்ட மிளகாய் ரகங்களை 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து பட்டியல் இட்டனர். 2011 ஆம் ஆண்டில்தான் உலகிலேயே மிக மிக அதிகமான காரம் கொண்ட மிளகாய் என பூத் ஜோலோகியா (Bhut Jolokia) தேர்வானது. இதன் காரத்தன்மை ஒரு மில்லியனைத் தாண்டி இருந்தது. அதாவது 10 லட்சத்து 41 ஆயிரத்து 427 யூனிட் (1,041,427) அளவு கார்த்தன்மை கொண்டது. இதற்கு முன்பு வரை எந்த மிளகாயும் இந்தளவு காரத்தை எட்டியதே கிடையாது. ஆகவே இந்த மிளகாய் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த மிளகாய் இந்தியாவில் அஸாம் மாநிலத்தில் விளைந்தது ஆகும். இதை பூத மிளகாய், விஷ மிளகாய், நாகா மிளகாய், ராஜ மிளகாய் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

அஸாம், மணிப்பூர், நாகலாந்து மற்றும் பங்களாதேசத்தின் சில பகுதிகளில் இதை பயிரிடுகின்றனர். 2012 ஆம் ஆண்டில் டிரினிடாட் மோருகா ஸ்கார்பியன் எனப்படும் நெய் மிளகாய் உலகிலேயே அதிகமான காரம் கொண்ட மிளகாய் என்கிற பட்டத்தைப் பெற்றது. அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை கரோலீனா ரீப்பர் என்ற மிளகாயே உலகின் அதிக காரம் கொண்ட மிளகாய் என்கிற சாதனையைப் படைத்து வருகிறது.

 உலகின் முதல் 10 காரமான மிளகாய்கள்:

  1. கரோலினா ரீப்பர் (Carolina Reaper) – 2,200,000 SHU கின்னஸ் உலக சாதனைகள் அறிவிப்பின் படி, இது உலகின் மிகவும் காரமான மிளகாய் ஆகும்.
  1. டிரினிடாட் மோருகா ஸ்கார்பியன் (Trinidad Moruga Scorpion) – 2,009,231 SHU
  2. 7 பாட் டக்லா (7 Pot Douglah) – 1,853,936 SHU
  3. 7 பாட் ப்ரிமோ (7 Pot Primo) – 1,469,000,SHU
  4. டிரினிடாட் ஸ்கார்பியன் “புட்ச் டி” (Trinidad Scorpion “Butch T”) – 1,463,700 SHU
  5. நாகா வைப்பர் (Naga Viper) – 1,349,000 SHU
  6. கோஸ்ட் மிளகாய் (பூட் ஜோலொகி) (Ghost Pepper (Bhut Jolokia)) – 1,041,427 SHU
  7. 7 பாட் பாராக்ஸ்போர் (7 Pot Barrackpore) – 10,00,000 SHU
  8. 7 பாட் ரெட் (பெரியது) (7 Pot Red (Gieant)) – 10,00,000 SHU
  9. ரெட் சாவினா ஹபனேரோ (Red Savina Habanero) – 500,000 SHU

இந்த மிளகாயில் இருந்து நெய் மணம் வீசும். சமையலில் ஒரு சிறிதளவு மிளகாயைச் சேர்த்தால் கமகமக்கும் நெய் மணம் வீசும். ஆகவேதான் இதற்கு நெய் மிளகாய் என்று பெயர் வந்தது. மேலும் இது பம்பரம் போல் காட்சித் தருவதால் பம்பர மிளகாய் என்கிற பெயரும் இதற்கு உண்டு. இந்த மிளகாய் ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல், குன்னூர், மூனாறு போன்ற மலைப்பிரதேசங்களில் விளைகிறது. இது கேப்சிகம் சைனென்ஸ் (Capsicum chinense) என்ற இனத்தில் இருந்து உருவாக்கப்பட்ட டிரினிடாட் மோருகா ஸ்கார்பியன் (Trinidad Moruga Scorpian) என்னும் ரகமாகும். இந்த நெய் மிளகாயின் பூர்வீகம் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவுகளாகும். இங்கு மொருகா என்னும் மாவட்டத்தில்தான் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனாலேயே இதற்கு டிரினிடாட் மொருகா ஸ்கார்பியன் எனப் பெயர் சூட்டப்பட்டது. அதன் பிறகு இதன் காரத் தன்மை மற்றும் நெய் மணத்திற்காக உலகம் முழுவதும் பரவியது.

இந்த மிளகாய்ச் செடி 4 முதல் 5 அடி உயரம் வரை வளரும். மூன்று மாதத்தில் காய்க்கத் தொடங்கும். பூ வெள்ளை நிறம் கொண்டது. மிளகாய் பழுத்தவுடன் சிவப்பாகக் காணப்படும். இதில் வைட்டமின் சி யும், சிறிதளவு கரோட்டினும் உள்ளது. ஒரு செடியில் 1 முதல் 3 கிலோ வரை மிளகாய் கிடைக்கும். மழை காலங்களில் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். கோடை காலத்தில் காய்ப்பு குறைவாக இருக்கும். இதன் ஆயுட் காலம் 2 – 3 மூன்று ஆண்டுகளாகும்.

நெய் மிளகாய் செடிகளை வீடுகளில் வளர்ப்பதை பெருமையாகக் கருதுகின்றனர். ஒரு மிளகாய்க்கு ஒரு கிலோ பருப்பு என்கிற அடிப்படையில் பயன்படுத்துகின்றனர். தேங்காய் சட்டினி தயாரிப்பதற்கு ஒரு சிறிய துண்டு மிளகாய் போதுமானது. நெய் மணத்துடன் தேங்காய் சட்டினி பிரமாதமாக இருக்கும். நெய் மிளகாயின் காரத்தன்மை 2009231 ஸ்கோவில் அலகுகளாகும். காரத் தன்மையில் இது உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது அதிக காரத்தன்மை கொண்டுள்ளதால் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.

 -ஏற்காடு இளங்கோ.

 

One Response

  1. MANIMARAN September 14, 2019 4:50 pm

Leave a Reply