விளம்பர குறைவு; விற்பனை சரிவு!- விடைபெறும் விகடன் இதழ்கள்!-அச்சு ஊடகங்களின் இந்த அவல நிலைக்கு யார் காரணம்?

ஒரு காலத்தில் கல்வி, மருத்துவம், இதழியல் இவை மூன்றும், சமூக சேவையாகவே கருதி செயல்படுத்தி வந்தனர். அதனால் “பத்திரிகையாளர்” என்றாலே, சமூகத்தில் மக்களிடம் நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்து வந்ததுஆனால், நாளடைவில் வணிக நோக்கம் கொண்டவர்கள் இத்துறைகளில் கால் பதித்ததால் வந்த வினை, இவை மூன்றும் முழுக்க, முழுக்க வியாபாரமாக மாறி விட்டது. இதனால் மற்ற தொழில் நிறுவனங்களைபோல, இதிலும் போட்டிகள் அதிகரிக்க தொடங்கின. விற்பனை இலக்கை விட, விளம்பர இலக்கை நிர்ணயிக்க தொடங்கினார்கள்.

இந்நிலையில், இதழியல் துறையில் கொடிக்கட்டி பறந்த பிரபல அச்சு ஊடகங்கள் அனைத்தும், விளம்பர குறைவு, விற்பனை சரிவு காரணமாக, தற்போது கவலைக்கிடமாக காட்சி அளிக்கிறது. அந்த வகையில் விகடன் குழுமமும் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

தொலைக்காட்சிகள் வருகைக்கு பின்னரும், தங்கள் இருப்பை தக்கவைத்து தாக்கு பிடித்து வந்த இவர்கள், ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கத்தால் தற்போது நிலைகுலைந்துபோயுள்ளனர்.

அச்சு ஊடகங்கள் வெளிவந்த அடுத்த நிமிடமே Portable Document File (PDFஆக மாற்றப்பட்டு, வாட்ஸ்அப் செயலி மூலம் மின்னல் வேகத்தில் உலகமெங்கும் இலவசமாக பரப்பப்படுகிறது. இதனால் தினசரி, வார, மாத மற்றும் பருவ இதழ்கள் அனைத்தும் வீடுகளுக்கும், கடைகளுக்கும் வந்து சேர்வதற்கு முன்பாகவே ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் மக்களின் பார்வைக்கு வந்துசேர்ந்து விடுகிறது.

இதனால் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும், இதழ்களின் விற்பனையும், விளம்பர வருவாயும் மளமளவென குறைந்து விட்டன. செய்தி வெளியிட்டால்தான் விளம்பரம் தருவோம்” என்று அரசியல், கல்வி, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் அச்சு ஊடக விளம்பர நிர்வாகிகளை செல்லமாக மிரட்டவே தொடங்கிவிட்டனர். வேறு வழியில்லாமல் பல முன்னனி தினசரி பத்திரிகைகள் அரை பக்கம் விளம்பரம் கொடுத்தால், கால் பக்கம் செய்தி வெளியிடும் அவலம் தொடர்ந்து வருகிறது.

பிரதிகளை விற்றுதான் அடுத்த இதழை வெளியிட வேண்டுமானால், இந்தியாவில் எந்த அச்சு ஊடகங்களும் ஒரு மாதம்கூட தாக்குபிடிக்க முடியாது. விளம்பர வருவாய் இல்லை என்றால், வணிக நோக்கத்தில் செயல்படும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்தும் ஒரே நாளில் தடயமில்லாமல் ஒழிந்து போகும். அதனால்தான் ஊடகத்துறையில் செய்தி வெளியிடுவதில் பல்வேறு தடுமாற்றங்களும், சமரசங்களும், அதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

இந்நிலை முற்றிலும் மாறவேண்டுமானால், வணிக நோக்கம் கொண்டவர்கள் ஊடகத்துறைக்கு வராமல் இருப்பது அவர்களுக்கும் நல்லது; இந்த தேசத்திற்கும் நல்லது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

One Response

  1. MANIMARAN September 15, 2019 5:45 pm

Leave a Reply