சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், நாகலூர் பஞ்சாயத்திற்குட்பட்ட கொளகூர் கிராமத்தை சேர்ந்தவர் அலவராக்கவுண்டர் மகன் சின்ராஜ் 45. விவசாயத்தொழில் செய்து வருகிறார். இவர் பா.ஜ.க. வின் ஏற்காடு ஒன்றிய துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இவரது சித்தப்பா சென்றாயக்கவுண்டர் இறந்த பின்னர் அவரது நிலத்தை சென்றாயக்கவுண்டரின் இரு சகோதரிகள் மற்றும் சகோததரர் அலவராக்கவுண்டர் ஆகியோருக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
அலவராக்கவுண்டர் இறந்த பின்னர் அவரது நில பாகம் சின்ராஜின் தாயார் கரியம்மாள் பெயருக்கு மாறுதல் ஆகியுள்ளது. இருந்தபோதிலும், கரியம்மாள் நிலத்தை சென்றாயக்கவுண்டரின் சகோதரி வெள்ளயைம்மாளின் மகன் ராமகிருஷ்ணன் பயன்படுத்தி வந்துள்ளார்.
கரியம்மாளின் மகன்கள் தங்கள் நிலத்தை ராமகிருஷ்ணணிடம் இருந்து மீட்டு தரும்படி ஊர் பெரியவர்களிடம் கூற, நேற்று காலை கொளகூர் கிராம, பிள்ளையார் கோவில் திடலில் ஊர்பஞ்சாயத்து கூடி, கரியம்மாளுக்கு சொந்தமான நிலத்தை, அவர்களது வாரிசுகளிடம் ஒப்படைக்கும்படி, ராமகிருஷ்ணணிடம் கூறியுள்ளனர். அதற்கு ராமகிருஷ்ணனும் ஒப்புக்கொண்டார்.
பின்னர் நேற்று மதியம் கொளகூரில் உள்ள சரவணன் டீ கடையில் அமர்ந்திருந்த சின்ராஜை, திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வரும் ராமகிருஷ்ணின் மகன் மணிகண்டன் 25. என்பவர் அரிவாளால் தோள்பட்டை, கை, முகம், பின் மண்டை ஆகிய பகுதியில் வெட்டியுள்ளார். இதில் சின்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். கொலையாளி மணிகண்டன் அங்கிருந்த தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
இந்த கொலை குறித்து விசாரிக்க ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி துவங்கியது. இந்நிலையில் வனப்பகுதியில் சுற்றி திரிந்த கொலையாளி மணிகண்டன் நாகலூர் பகுதியில் சுற்றி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சேலம் செல்வதற்காக பஸ் ஏற, நாகலூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த மணிகண்டனை இன்று பகல் 11:00 மணியளவில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாணை மேற்கொண்டபோது, அவர் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி உத்தரவின் பேரில் சிறையிலடைக்கப்பட்டார்.
-நே.நவீன் குமார்.