130 கோடி இந்தியர்களின் பங்கேற்பினால் மட்டுமே இந்தியாவை மகத்தான தேசமாக உருவாக்க முடியும்!- சென்னையில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.

130 கோடி இந்தியர்களின் பங்கேற்பினால் மட்டுமே இந்தியாவை மகத்தான தேசமாக உருவாக்க முடியும்!- சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் 56 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க  பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்து சேர்ந்தார்.  சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

2019 பொதுத் தேர்தலுக்குப் பின் சென்னைக்குத் தமது முதலாவது பயணம் இது என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.  சென்னை ஐஐடி-யின் வைரவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நான் வந்துள்ள போதும், என்னை வரவேற்க பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் கடன்பட்டுள்ளேன். 

அண்மையில் எனது அமெரிக்கப் பயணத்தில் இந்திய சமூகத்தினரிடையே நான் தமிழில் உரையாற்றியபோது, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று கூறியதை, அமெரிக்காவில் உள்ள அனைத்து ஊடகங்களும் விரிவாக வெளியிட்டிருந்தன என்று நரேந்திர மோதி கூறினார்.

எனது அமெரிக்கப் பயணத்தின் போது, மகத்தான எதிர்பார்ப்புகளுடன் இந்தியாவை உலகம் பார்த்துக் கொண்டிருப்பதை  நான் உணர்ந்தேன்.  அந்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது இந்தியாவை மகத்தான தேசமாக்குவது மட்டும் நமது பொறுப்பாக இல்லாமல், உலக சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதையும் கூட, நாம் ஏற்க வேண்டியுள்ளது.

இதனை மத்திய அரசால் மட்டும் செய்து விட முடியாது. 130 கோடி இந்தியர்களால் மட்டும்தான் இது முடியும். ஏழையோ, பணக்காரரோ, நகரவாசியோ, கிராமவாசியோ, இளைஞரோ, முதியவரோ யாராக இருந்தாலும், நாட்டின் மூலை முடுக்கில் உள்ள இந்தியர்கள் ஒவ்வொருவரின் முயற்சியால்தான் இதனை சாத்தியமாக்க முடியும். 

பொதுமக்கள் பங்கேற்பின் மூலம் பலவற்றை நாம் வெற்றிகரமாக சாதித்திருக்கிறோம் என்றும், அதே வழியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாட்டிலிருந்து நாம் விரட்ட வேண்டும். பிளாஸ்டிக்கை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று நான் விரும்புவதாக சிலர் தவறுதலாகப் பொருள் கூறி வருகிறார்கள்.  நான் அவ்வாறு கூறவில்லை.  நான் கூறியது என்னவென்றால், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை நாட்டிலிருந்து  ஒழிக்க விரும்புவதாகத்தான்  நான் கூறினேன்.  இந்த வகை பிளாஸ்டிக்குகளை ஒருமுறை மட்டும்தான பயன்படுத்த முடியும், அவை பிற்காலத்தில் ஏராளமான பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி நாம் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டும்.  இந்தப் பாத யாத்திரைகள் மூலம் காந்தியின் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் என்னை வரவேற்க வந்திருக்கும் உங்களுக்கு நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி கூறினார். 

—————————————————————————–

நாட்டின் பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வுகளை மாணவர்கள் கண்டறிய வேண்டும்: சிங்கப்பூர் இந்தியா ஹேக்கத்தானில் பரிசுகளை வழங்கி  பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.

சென்னை ஐஐடி-யில் இன்று நிறைவடைந்த 36 மணிநேர சிங்கப்பூர் இந்தியா ஹேக்கத்தானில் வெற்றிபெற்றவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோதி பரிசுகளை வழங்கி உரையாற்றினார். 

“நண்பர்களே, ஹேக்கத்தான் வெற்றியாளர்களை நான் பாராட்டுகிறேன். மேலும், இங்கே கூடியிருக்கின்ற அனைத்து இளம் நண்பர்களை, குறிப்பாக எனது மாணவ நண்பர்களை நான் பாராட்டுகிறேன்.  சவால்களை எதிர்கொள்வதற்கும், நடைமுறை சாத்தியமான தீர்வுகளைக் காண்பதற்குமான உங்களின் விருப்பம், உங்களின் சக்தி, உங்களின் ஆர்வம் ஆகியவை போட்டியில் வெற்றி பெறுவதை விட, மிகவும் மகத்தானதாகும்”.

சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய தொழில் தொடங்கும் மூன்று முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.  கடந்த ஐந்தாண்டுகளில் புதிய கண்டுபிடிப்புகள்  மற்றும் அதற்கான முயற்சிகளுக்கு இந்தியா மிகப்பெரும் முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது.

“அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், பிரதமரின் ஆராய்ச்சி உதவி நிதி, திட்டம் போன்றவை 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கான அடிப்படைத் திட்டங்களாகும்.  புதிய கண்டுபிடிப்பு என்பதை ஒரு கலாச்சாரமாக இந்தியா மேம்படுத்தி வருகிறது.  எந்திர வழிக்கற்றல், செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின் போன்ற நவீன தொழில்நுட்பங்களை 6 ஆம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு கற்றுத்தர நாம் இப்போது முயற்சி செய்கிறோம்.  பள்ளியிலிருந்து உயர்கல்வியில் ஆய்வு என்பது புதிய கண்டுபிடிப்புக்கான சூழலாக உருவாக்கப்பட்டு வருகிறது”.

இந்தியா எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வுகளை மாணவர்கள் கண்டறிய வேண்டும்.

இந்தியா தனது தீர்வுகளை உலகத்திற்கு குறிப்பாக, பல நாடுகளில் உள்ள அதிஏழைகளுக்கு வழங்க விரும்புகிறது என்றார்.. 

“இரண்டு பெரிய காரணங்களுக்காகப் புதிய கண்டுபிடிப்புகளையும், அதற்கான முயற்சிகளையும் நாம் ஊக்கப்படுத்தி வருகிறோம்.  ஒன்று வாழ்க்கையை எளிதாக்குவதற்காக இந்தியாவின் பிரச்சினைகளுக்கு எளியத் தீர்வுகளைக் காண நாம் விரும்புகிறோம்.  மற்றொன்று ஒட்டுமொத்த உலகத்திற்கும்  தீர்வுகளைக் காண இந்தியா விரும்புகிறது.  உலக நிலைமைகளுக்கு இந்தியாவின் தீர்வுகள் என்பது நமது இலக்காகவும், குறிக்கோளாகவும் இருக்கிறது.  அதிஏழ்மையான நாடுகளுக்குத் தேவைப்படும் சேவைகள் கிடைக்க குறைந்த செலவிலான தீர்வுகளையே நாம் விரும்புகிறோம்.  இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் மிகவும் தேவைப்படுகின்றவர்களுக்கு, எங்கே வாழ்பவர்களாக இருந்தாலும், அதிஏழைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்”.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி கூறினார். 

-எஸ்.திவ்யா, ச.நந்தகுமார், ஏ.அனுசுயா.

One Response

  1. MANIMARAN October 2, 2019 10:34 am

Leave a Reply