சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ஆண்டு தோறும் அக்டோபர் 12 அன்று கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி, ஏற்காட்டில் நேற்று காலை பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
மாணவர்கள் கலந்துக்கொண்ட பேரணி அண்ணா பூங்காவில் வட்டாட்சியர் முருகேசன் மற்றும் ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் துவங்கியது. ஒண்டிக்கடை, அண்ணா சிலை, சந்தை பேட்டை உள்ளிட்ட பகுதிகளை கடந்து பேரணி படகு இல்ல ஏரியில் நிறைவுற்றது. அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
பின்னர் படகு இல்ல ஏரியில், தண்ணீரில் தவறி விழுந்தவர்களை எவ்வாறு மீட்பது? அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது? கட்டிட இடிபாடுகள் உள்ளிட்ட இடர்களில் சிக்கியவர்களை எவ்வாறு தூக்கி செல்வது? என்பது குறித்து, ஏற்காடு தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர்.
இந்நிகழ்ச்சியை பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு பேரிடர் மீட்பு குறித்து தெரிந்து கொண்டனர்.
Good awareness program