பாதுகாப்பான தொடுதல்!பாதுகாப்பற்ற தொடுதல்!-குழந்தைகள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி எலைட் சிறப்பு பள்ளியில் குழந்தை பாலின கொடுமையைத் தடுக்க பாதுகாப்பு கல்வி முறை குறித்த நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி தாளாளர் முத்துலெட்சுமி வரவேற்றார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் பேசுகையில்,

ஒவ்வொரு குழந்தையும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள பள்ளியில் சுயபாதுகாப்பினைக் கல்வியாக எடுத்துரைக்க வேண்டும்.ஒவ்வொரு குழந்தையும் எல்லா நேரத்திலும் பாதுகாப்பாக உணர தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலைக் குழந்தைகளுக்குத் தருவதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் சமூகம், பெற்றோர்க்கும் எடுத்துரைக்க வேண்டும்.

குழந்தைகளைக் கொடுமையிலிருந்து குறிப்பாகப் பாலியல் கொடுமையிலிருந்து பாதுகாப்பதற்காக அவரவர் வயதிற்குப் பொருத்தமான தகவல்கள், திறன்கள் மற்றும் சுயமதிப்பைத் தருவதன் மூலம் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலை பெறுவார்கள்.

குழந்தைகளுக்கு தமது உடல், தமக்கு மட்டுமே சொந்தம் என்றும் தமக்குப் பிடிக்காத அல்லது புரியாத வகையில் தமது உடலைத் தொட யாருக்கும் உரிமை இல்லை என்றும் கற்றுத்தர வேண்டும்.

குழந்தைகள் கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அவற்றை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது மூலம் தங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவ முடியும். குழந்தைகள் தங்கள்மீது நம்பிக்கை கொள்ளக் கற்றுத் தருவதன் மூலம் அடுத்தவரது உரிமைகளுக்குப் பங்கம் ஏற்படுத்தாமலும் அதே சமயத்தில் தயக்கமின்றித் தங்களுடைய உரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் வகையிலும் நடந்துகொள்ளவும் உதவும். குடும்பம், பள்ளி, சமூகம், நண்பர்கள் என்று ஒவ்வொரு குழந்தையின் உதவி மற்றும் ஆதரவு அமைப்பையும் சீராகக் கட்டமைக்க சுய பாதுகாப்பு உதவுகிறது. ஒவ்வொரு குழந்தையும் தனது சுயமதிப்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் நம்பிக்கைத் திறன்களை நடைமுறைப்படுத்தித் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆற்றல் அளிக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் திறனை சுயபாதுகாப்பு வளர்க்கிறது.

முறைகேடான பாலியல் தொடுதல்களுக்கு பாலியல் குற்றவாளிகள் மட்டுமே பொறுப்பு, அது குழந்தையின் தவறல்ல என்று சுய பாதுகாப்பை கற்றுத் தரவேண்டும். குழந்தையைத் தொட்டுத்தான் கொடுமையிழைக்க முடியும் என்பதல்ல தொடாமல் செய்யும் செயல்களும் அதில் அடக்கம். இந்த விதிகளை உங்கள் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அடுத்தவர்களுடைய தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தொடுவது சரியல்ல. உன் முன்னால் வேறு ஒருவர் அவருடைய தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தானே தொட்டுக் கொள்வது சரியல்ல. ஒருவர் உன்னை அவருடைய தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தொடச் சொல்வது சரியல்ல. உன் உடைகளைக் களைந்துவிட்டு உன்னை ஒருவர் நிழல்படமோ வீடியோவோ எடுப்பது சரியல்ல. உடைகள் இல்லாமல் மற்றவர்கள் இருக்கும் படங்களையோ வீடியோவையோ வேறு ஒருவர் காண்பித்து உன்னைப் பார்க்கச்சொல்வது சரியல்ல என வெவ்வேறு விதமான தொடுதல்களைப் பற்றிக் குழந்தைகளுடன் பேசுங்கள். மூன்று விதமானதொடுதல்கள் உள்ளன என்பதைக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஒரு குழந்தையானது அன்பு, ஆதரவு, அக்கறை, ஊட்டம், உதவி இவற்றை உணரச் செய்யும் தொடுதல்கள் பாதுகாப்பான தொடுதல்கள் . இவை பெற்றுக்கொள்பவரை சிறுமைப்படுத்துவதோ அவரிடம் இருந்து எதையாவது அபகரித்துக் கொள்வதோ இல்லை. இதுபோன்ற தொடுதல்களைத்தான்எல்லா மனிதர்களும் பெறவேண்டும்.

பெறுபவரைக் காயப்படுத்துகிற அல்லது, வருத்த மூட்டுகிற, உணர்வுகளைத் தூண்டும்; வலி எற்படுத்தும், அல்லது பெறுபவரின் (குழந்தைகளின்) உணர்வுக்கு மதிப்பளிக்காது. இந்தத் தொடுதல் தனக்குப் பிடிக்கவில்லை என்பது குழந்தைக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்திருக்கும். இந்தத் தொடுதல் மூலம் தன்னைப்பிறர் தமது சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், வற்புறுத்தி இணங்க வைக்கிறார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள், பயமூட்டுகிறார்கள் என்பதைக் குழந்தை தெளிவாக உணர்ந்துள்ளது

தொடப்படுபவருக்கு அசௌகரியம், மன அமைதியின்மை, குழப்பம், நடப்பது சரியா தவறா என்று சரியாகத் தெரியாத நிலை போன்றவற்றை இவ்வகைத் தொடுதல் ஏற்படுத்துகிறது. தன்னைத் தொடுபவர் குறித்தும் தொடுதல் குறித்தும் குழந்தையிடத்தில் குழப்பமான எண்ணங்களையும் உணர்வுகளையும் தூண்டுகிறது. எதற்காக இப்படித் தொடுகிறார் என்று தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம் அல்லது அந்தத் தொடுதல் இதற்கு முன் குழந்தை அறிந்திராத வகையில் அமையலாம்.

சில சமயங்களில் குழந்தையின் பாலியல் உணர்வுகளைத் தூண்டக்கூ.டிய தொடுதலாக இருக்கும். மேலும்.,அந்த அனுபவத்தை ரகசியமாக வைத்துக் கொள்ளச் சொல்வதன் வாயிலாக, அல்லது அடுத்தவர் முன்னிலையில் அளவுக்கதிகமான நெருக்கமான அக்கறையைக் குழந்தைக்கு அளிப்பது போன்ற கவனிப்பு ஆகியன குழந்தையின் மனதுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அதே சமயத்தில் மிகுந்த கலக்கத்தை ஊட்டுவதாகவும் அமையலாம். எனவே, தொடுதலைப் பற்றி ஆசிரியர்கள், சிறப்பு குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்விற்காக எடுத்துரைப்பது நமது கடமை என்றார்.

சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

-எஸ்.திவ்யா.

One Response

  1. MANIMARAN November 26, 2019 6:10 pm

Leave a Reply