திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்கார்பாளையம், சிவன் கோவில் பகுதியில் வசிக்கும் பரமசிவம் என்பரின் காளை மாடு ஒன்றையும், சர்கார்பாளையம், நடுத்தெரு பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் காளை மாடு ஒன்றையும், கடந்த 29.12.2019 அன்று இரவு 11 மணி முதல் 30.12.2019 இரவு 1 மணிக்குள் மர்ம நபர்கள் சிலர், மேற்படி 2 காளை மாடுகளையும், பனையக்குறிச்சி அருகே உள்ள ARK நகர் வழியாக கள்ளத்தனமாக ஓட்டி சென்று, திருச்சி- சென்னை பைபாஸ் சாலை ARK நகர் அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டில் ராஜஸ்தான் மார்பில் குடோனுக்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து வேனில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இவை அனைத்தும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மர்ம நபர்கள் திருடி சென்ற 2 காளை மாடுகளின் விலை 140,000 என்கின்றனர் மாட்டின் உரிமையாளர்கள். இந்த திருட்டு சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் மாட்டின் உரிமையாளர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்தையும், கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவையும் பார்வையிட்ட திருவெறும்பூர் காவல் நிலைய குற்ற பிரிவு போலிஸ் ஏட்டு ஒருவர், ‘மாடு திருட்டுக்கெல்லாம் நாங்கள் என்னய்யா செய்ய முடியும்? என்று அலட்சியமாக கூறியுள்ளார். அதன் பிறகு திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு மாட்டின் உரிமையாளர்கள் பல முறை அலைந்தும், புகாருக்கான இரசீது கூட இன்னும் வழங்கப்படவில்லை. புகார் கொடுத்த உடனே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் மாட்டை உயிரோடு பிடித்து இருக்கலாம். ஆனால், இப்போது இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. எல்லா மாட்டு சந்தைகளையும் நாங்கள் தேடி பார்த்துவிட்டோம், ஆனால் எங்கள் மாடு கிடைக்கவில்லை என்கின்றனர் மாட்டின் உரிமையாளர்கள்.
இப்பகுதியில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட காளை மாடுகளும், 25-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளும் திருடு போயிள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆடு, மாடு என்பது அதிகாரிகளுக்கு வேண்டுமானால் அலட்சியமாகவும், இலக்காரமாகவும் இருக்கலாம். ஆனால், அதுதான் கிராமப்புற மக்களின் மிக பெரிய சொத்து என்பதை அவர்கள் உணர வேண்டும்.
தங்கத்திற்கு அடுத்து உடனே விற்று பணமாக்கக் கூடியது ஆடு, மாடுகள்தான்!-அதனால்தான் ஆடு, மாடுகள் திருட்டு இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, இத்திருட்டு சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளோம். விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்.
–டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Padippatharkkae, varuthamaga irukkirathu
Kalavu pona kalai madugalai, Police kandippaga kandupidithu thara vendum