கடந்த ஆண்டு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 11 பேர் ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து அவர்கள் 11 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அந்த 11 பேரும் பா.ஜ.வில் இணைந்தனர்.
இந்நிலையில், 2019 ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இடைத்தேர்தலில், இவர்களுக்கு ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதியிலேயே பா.ஜ. சீட் வழங்கியது. அதே தொகுதிகளில் அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றனர். இதனால் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது.
இதற்கு நன்றி கடனாக இவர்களில் 10 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என பா.ஜ. மேலிடம் முடிவு செய்தது.
இது தொடர்பாக ஜனவரி 31-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சந்தித்து பேசினார்.
இதனையடுத்து அமைச்சரவை விரிவாக்கத்திற்கான கடிதத்தை முதல்வர் எடியூரப்பா, கர்நாடக ஆளுநரிடம் வழங்கினார். இந்நிலையில் இன்று காலை கர்நாடக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில், ஆளுநர் வஜூபாய் வாலா புதிய அமைச்சர்கள் 10 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இவர்களில் 8 பேர் காங்கிரஸ் மற்றும் 2 பேர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து வந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-எஸ்.சதிஸ் சர்மா.