சேலம் மாவட்டம், ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முளுவி கிராமம். இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் வேலைக்காகவும், மாணவர்கள் மேல்நிலை கல்வி மற்றும் கல்லூரி படிப்பிற்காகவும் ஏற்காடு வரவேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் இந்த கிராமத்திற்கு செல்லும் தார் சாலை கரடியூர் பிரிவு முதல் சேதமடைந்துள்ளது.
இதனால் இன்று காலை முளுவி கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்தினை கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் சிறைபிடித்து வைத்தனர். உடனடியாக ஏற்காடு பொறுப்பு பி.டி.ஓ. குணசேகர் மற்றும் ஏற்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு ஆகியோர் முளுவி கிராமத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அவர்கள் சாலை சரிசெய்து தரப்படும் என்று உத்திரவாதம் அளித்ததையடுத்து, கிராம மக்கள் பேருந்தை விடுவித்தனர்.
சாலையை சரிசெய்ய அளவீடு பணி நடைப்பெற்றது. இந்த பேருந்து சிறைபிடிப்பையடுத்து, ஏற்காடு சேர்மேன் சாந்தவள்ளி அண்ணாதுரை மற்றும் துணை சேர்மேன் சேகர் ஆகியோர் ஒன்றிய அதிகாரிகளுடன் முளுவி கிராமம் சென்று, சேதமடைந்த சாலையை பார்வையிட்டனர். பின்னர், அதிகாரிகள் அந்த சாலையை அளவீடு செய்து மொத்தமுள்ள 1.6 கிலோ மீட்டர் சாலையை சரி செய்ய திட்ட மதிப்பீடு உருவாக்கி, அனுமதிக்காக உயர் அதிகாரிகளுக்கு கொண்டு சென்றனர்.
-நே.நவீன் குமார்.