250 விடுதி அறைகள், 800 கட்டில்கள், 100 வகுப்பறைகள், 15,000 சதுரடிக் கொண்ட ஆடிடோரியம், 15,000 சதுரடிக் கொண்ட சமையல் கூடம் ஆகிய வசதிகளைக்கொண்ட தமக்கு சொந்தமான கல்லூரியை, கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று, தமிழக முன்னாள் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் நா.பழனிசாமி, கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இன்று கடிதம் வழங்கியுள்ளார்.
இது சம்மந்தமாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமியை இன்று (31.03.2020) மாலை 6.22 மணிக்கு நாம் தொடர்பு கொண்டோம்.
உலகம் முழுவதும் “கொரோனா நோய்” தொற்றால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அது நமக்கு பெரும் கவலையளிக்கிறது. குறிப்பாக நம் தமிழ்நாட்டில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து விடக்கூடாது என்பதுதான் எனது ஆதங்கம்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக சீன அரசாங்கம் பல கோடி செலவு செய்து 10 நாட்களில் தற்காலிகமாக மருத்துவமனைகளை கட்டியது. இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்காக, நாம் ஏதாவது உதவ வேண்டும் என்று நான் யோசித்தேன். அவற்றின் வெளிப்பாடுதான் இந்த அறிவிப்பு என்றார்.
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமியின் கடிதம் குறித்து, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணியிடம் விசாரித்தோம். அவரின் கடிதம் எனக்கு கிடைத்துள்ளது. இதுபோன்ற பேரிடர் காலங்களில் யார் உதவ முன் வந்தாலும் மாவட்ட நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளும் என்றார்.
இந்த ஆபத்தானத் தருணங்களில் சாதி, மத, இன, மொழி, அரசியல் பேதமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற உதவிகளை செய்வதற்கு தாமாகவே முன் வரவேண்டும்.
ஏனென்றால், இல்லாமை வேறு! இயலாமை வேறு! ஆனால், விரும்பாமை பாவம்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Hands up to NA. PALANICHAMY SIR