திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே, இன்று (ஜூன்-1) காலை 6 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் உருவ பொம்மையை தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு கம்பியில் கட்டி வைத்து, எதற்காக இந்த போராட்டம் என்பதை விளக்கி 7 நிமிடம் 43 வினாடி முகநூல் (Face book ) பக்க வீடியோவில் நேரலையாக (Live) பேசி, அதன் பிறகு நெடுஞ்சாலையின் தடுப்பு கம்பியில் கட்டி வைத்து இருந்த தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் உருவ பொம்மை முழுவதுமாக எரியும்வரை அங்கேயே காத்திருந்து, அது எரிந்து முடிந்தவுடன் அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்த நபரின் பெயர் ரகு என்பதும், அவர் தமிழ்த்தேச மக்கள் முன்னணி என்ற அமைப்பின் திருச்சி மாவட்ட குழு உறுப்பினர் என்பதும், அவர் திருவெறும்பூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ரகு வயது 30, த/பெ குருசாமி என்பவர் இன்று (ஜூன்-1) மாலை திருவெறும்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும், தமிழக முதலமைச்சரின் உருவபொம்மையை எரிக்க பயன்படுத்திய இருச்சக்கர வாகனம், உபகரணங்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 124(A), 285, 153, 505(1)(b) IPC ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி அவரது உத்தரவுப்படி ரகு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-ஆர்.சிராசுதீன்.