ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே.பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சட்ட விரோதமாக அடைத்து வைத்து, கொலை செய்ததோடு, அதற்கான சாட்சியங்களையும் அழித்துள்ளனர் என்று, சம்மந்தப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 342, 302, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் சி.பி-சிஐடி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேற்காணும் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சி.பி-சிஐடி டி.எஸ்.பி. அனில் குமார், 15 சாட்சிகளை விசாரித்து உண்மையை உறுதி செய்த பிறகுதான் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவான காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சி.பி-சிஐடி அதிகாரிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றி, 24 மணி நேரத்திற்குள் புலன் விசாரணை செய்து, சாட்சியங்களையும், ஆதாரங்ககளையும் மற்றும் தடயங்களையும் சேகரித்து, குற்றவாளிகளை அடையாளப்படுத்தி, ஒருவரை தவிர, மற்ற அனைவரையும் தேடி கைது செய்து சிறையில் அடைத்து விட்டு, ஆவணங்களை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்து இருப்பது, உண்மையிலுமே பாரட்டத்தக்கது. காவல்துறையில் நல்லவர்களும், நேர்மையானவர்களும், கடமை உணர்ச்சி உள்ளவர்களும் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. இதற்காக உயர்நீதி மன்ற நீதிபதிகள் பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், போலிஸ் படை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் ஒழுக்க ரீதியாகவும் வலுவானதாக இருந்தால் மட்டுமே பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். ஒரு சிலரின் இதுபோன்ற மோசமான செய்கைகள், காவல்துறையில் உள்ள 1.25 லட்ச பணியாளர்களை கண்டிக்க ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்றும், உயர்நீதி மன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், இவ்வழக்கில் கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் எம்.எஸ்.பாரதிதாசனிடம் முக்கிய சாட்சியம் அளித்துள்ள, சாத்தான்குளம் காவல் நிலைய தலைமை காவலர் ரேவதியிடம், தொலைபேசி மூலம் பேசிய நீதிபதிகள், அவரின் பணிக்கும், பாதுகாப்பிற்கும் எந்த பாதிப்பும் வராமல் நீதிமன்றம் பார்த்துகொள்ளும் என்று உறுதி அளித்துள்ளனர்.
தற்போது தலைமை காவலர் ரேவதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் உடனே அவர் தூத்துக்குடி தலைமை நீதிபதியிடமோ (அல்லது) கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவரிடமோ தெரிவிக்கலாம் என்றும், உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கை தாமாக முன் வந்து பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் உத்தரவுகளை பிறப்பித்து, கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் எம்.எஸ்.பாரதிதாசன் விசாரணைக்கு உத்தரவிட்டு, சிபிஐ இவ்வழக்கை கையில் எடுப்பதற்குள் தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் என்று கருதி, அதுவரை சி.பி-சிஐடி அதிகாரிகள் விசாரிக்கட்டும் என்று சொன்னதோடு, சிறிதும் தாமதிக்காமல் வழக்கின் விசாரணை அதிகாரியாக சி.பி-சிஐடி டி.எஸ்.பி. அனில் குமாரை நியமித்து, சி.பி-சிஐடி விசாரணை போதுமானதாக இருந்தால், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவைப்படாது என்ற நம்பிக்கை வார்த்தைகளையும் அளித்த, உயர்நீதி மன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள், நீதித்துறை வரலாற்றில் நிச்சயம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Hands up to Honourable justices………..