ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை 29.07.2020 அன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள 36 பக்கங்கள் கொண்ட அந்த உத்தரவின் உண்மை நகலையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்களையும், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
ஆன்லைன், ஆஃப்லைன், பகுதியளவு ஆன்லைன் என மூன்று வழி முறைகளில் தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம். வீட்டுக்கல்வி என்னும் முறையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தப்படும். தமிழக அரசு வழங்கியுள்ள லேப்டாப் மூலமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு முடிவுகள் வெளியான பிறகு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்படும்.
1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒரு நாளைக்கு 2 முறை என 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.
ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பும் அதிகபட்சம் 45 நிமிடங்கள் மட்டுமே நடத்த வேண்டும். ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பு முடிந்த பிறகும் 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை விட வேண்டும்.
ஒரு ஆசிரியர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 6 ஆன்லைன் வகுப்புகளும், வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே எடுக்க வேண்டும். பள்ளி வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.
5 வயதுக்குட்பட்ட மழலையர் பள்ளி Pre KG (Pre-kindergarten), LKG (Lower Kindergarten), UKG (Upper Kindergarten) குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது.
கண் பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு, ஆன்லைன் வகுப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடல் ரீதியான, மன ரீதியான, பொருளாதார ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ள குழந்தைகளையும், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத (அல்லது) பங்கேற்க விருப்பமில்லாத குழந்தைகளையும், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்குமாறு வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்துவோ கூடாது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்
ullatchithagaval@gmail.com
Good..,