சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சதாசிவம் (வயது70). இவர் கடந்த ஆகஸ்ட் 23 முதல் காணாமல் போயுள்ளார். இது குறித்து கண்ணங்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. உறவினர்கள் சதாசிவத்தை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.
இந்நிலையில், இன்று சதாசிவத்தின் பேரன் குணசேகர் மற்றும் உறவினர்கள் கண்ணங்குறிச்சி பகுதியை ஒட்டிய வனப்பகுதிக்கு சதாசிவம் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அங்கு தேடியுள்ளனர். அடிவாரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் உடல் சிதைந்த நிலையில் எழும்பு கூடாக பிரேதம் ஒன்று இருந்துள்ளது. அந்த பிரேதம் சதாசிவம்தான் என உறுதிபடுத்திய குணசேகர், கண்ணங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
பிரேதம் உள்ள இடம் ஏற்காடு காவல் எல்லைக்குட்பட்டதால், அங்கு புகார் கொடுக்க அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சதாசிவத்தின் உறவினர்கள் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் காவல் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று எழும்பு கூட்டை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
–நே.நவீன் குமார்.