அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது தெரிவிக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரிப்பதற்குத் தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ள நிலையில், அவர் பதவியில் நீடிப்பது சரியானது அல்ல. எனவே, அவரை உடனடியாக இடைநீக்கம் செய்வதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் அனைவரும், துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
துணைவேந்தர் சூரப்பா நேர்மையானவர், அவர் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை. தற்போதைய சூழலில் துணைவேந்தர் சூரப்பா தலைமையில் அண்ணா பல்கலைக்கழகம் ஊழல் இல்லாத சோலையாக இருந்து வருகிறது என்று அதில் தெரிவித்துள்ளனர்.
இச்செய்தியை பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவரும், ஊடக அறிவியல் பேராசிரியருமான Dr ஐ.அருள் அறம் என்பவரை தொடர்பு கொண்டு துணைவேந்தர் சூரப்பா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்தோம்.
துணைவேந்தர் சூரப்பா நேர்மையானவர், அவர் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை. அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை; உள்நோக்கம் கொண்டவை. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை சரி செய்து, தவறு செய்தவர்கள் மீது அவர் உரிய நடவடிக்கையும் எடுத்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி வருகின்றனர்.
மேலும், அவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், அதை சகித்து கொள்ள முடியாத நபர்கள் அரசியல் காரணங்களுக்காக இது போன்ற பொய் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். எங்களை பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர் ஒருவர் துணைவேந்தராக வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்., அதே சமயம், தற்போது உள்ள துணைவேந்தர் சூரப்பா கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் நேர்மையை சந்தேகிப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
தான் துணைவேந்தராக இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரப்பா அவரது மகளுக்கு பணி வழங்கியிருப்பது சரிதானா? என்று நாம் கேட்டோம்.
கணவன் துணைவேந்தர்’, மனைவி பேராசிரியர் என்ற முன்னுதாரணங்கள் கடந்த காலங்களில் இதே அண்ணா பல்கலைக்கழகத்தில் அரங்கேறி இருக்கிறது. அப்போதெல்லம் இந்த விமர்சனங்கள் எங்கே போனது?! ஆனால், தன் மகளை சம்பளம் வாங்காத கௌரவ பணியில் தான் துணைவேந்தர் சூரப்பா நியமித்து இருக்கிறார். இது எப்படி குற்றமாகும்? இலவசமாக கல்வியை போதிப்பது தவறா? என்று ஐ.அருள் அறம் கூறினார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மூன்று மாத காலத்திற்குள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு தற்போது அமைத்துள்ளது. அது வரை தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகமே! ஒரு வேளை டிசம்பர் (அல்லது) ஜனவரியில் தமிழக சட்டசபை கலைக்கப்பட்டால் தமிழகத்தில் குடியாரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும். அப்படியானால் இந்த ஆணையத்தின் கதி என்னவாகும்?!
எது எப்படியோ ‘கடப்புடாத விசயத்தை கமிஷன் கையில் கொடு’ என்ற கதையாக தான் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் இருக்குமோ?! என்ற சந்தேகம் தற்போது எல்லோருக்கும் எழுந்துள்ளது.
அது வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com