அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியுமில்லை என்பார்கள். அதுவும் தேர்தல் என்று வந்து விட்டால், ‘எதிரியின் எதிரி; நமக்கு நண்பன்’- என்ற மனநிலைக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே வந்துவிடுகிறார்கள். இதில் யாரும் சளைத்தவர்கள் அல்ல. அர்த்த சாஸ்திரத்தைப் படிக்காமலேயே அனைவருமே அர்த்த சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள யுத்திகளின்படிதான் அரசியல் நடத்தி வருகிறார்கள். இதை மனசாட்சியுள்ள எந்த மனிதர்களும் மறுக்கமாட்டார்கள். குஞ்சுகளிடமிருந்து தாயை பிரிப்பதும்; தாயிடமிருந்து குஞ்சுகளை பிரிப்பதும் அரசியலில் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. தொழில் தர்மம்; அரசியல் நாகரீகம் என்பதெல்லாம் இங்கு மலையேறி ரொம்ப காலமாகிவிட்டது. ஆட்சி அதிகாரத்தை கைபற்றுவதற்கு எந்த பாவத்தையும் துணிந்து செய்வதற்கு அனைத்துக் கட்சிகளுமே துணிந்துவிட்டன. அந்த வகையில் தமிழக அரசியல் களம் தற்போது சூடுப்பிடித்து விட்டது; தேர்தல் விளையாட்டில் எப்படியாவது ஜெயித்து விடவேண்டும் என்ற வெறியோடு தங்கள் பயணத்தை இரகசியமாகவும், வெளிப்படையாகவும் அனைவருமே தொடங்கி விட்டார்கள். நாம் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தப்படி தமிழகத்தில் சில கட்சிகளை உடைக்கும் பணியும்; சில கட்சிகளை சிதைக்கும் பணியும் திட்டமிட்டப்படி இப்போது தொடங்கி விட்டது.
அந்த வகையில் திமுகவை உடைக்கும் முயற்சியில் பாஜக தலைமை மும்முரமாக உள்ளது. அதற்காக திமுக தலைமையின் மீது அதிருப்தியாக இருக்கும் கட்சியின் முக்கிய பிரமுகர்களை பாஜக வலைவீசி வருகிறது. மேலும், மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவதற்கு தயக்கம்காட்டி வருவதால், தமிழகத்தில் உள்ள மு.க.அழகிரி ஆதரவாளர்கள் அனைவரையும் பாஜகவில் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில், பாஜக மாநில தலைமை தற்போது களம் இறங்கியுள்ளது. இப்படி செய்வதின் மூலம் திமுகவின் வெற்றியை தடுத்துவிடலாம் என்பது பாஜகவின் மாபெரும் திட்டமாக உள்ளது.
இந்த இழப்புகளையெல்லாம் ஈடுக்கட்டுவதற்காக பாமகவை சிதைக்கும் முயற்சியில் திமுக தற்போது களம் இறங்கியுள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தருமபுரி கிழக்கு மாவட்ட பாமக துணைத்தலைவர் சி.சரவணன் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் ஏ.இளவரசன், மொரப்பூர் ஒன்றிய முன்னாள் துணைச்செயலாளர் ஆர்.தாண்டவன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் இன்று திமுகவில் இணைந்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், தருமபுரி கிழக்கு மாவட்டம், பா.ம.க.கட்சிச் சேர்ந்த மாநில பாட்டாளி சமூக ஊடக பேரவை துணைத் தலைவரும் – மொரப்பூர் ஒன்றிய முன்னாள் செயலாளரும் – மாவட்ட துணைத் தலைவருமான சி.சரவணன் அவர்கள் தலைமையில், பா.ம.க. கட்சியைச் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஏ.இளவரசன், மொரப்பூர் ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் ஆர்.தாண்டவன், தருமபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சாமிநாதன், தருமபுரி வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எம்.சேட்டு (எ) சின்னசாமி, தருமபுரி வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சதீஷ், மல்லசமுத்திரம் கிளைச் செயலாளரும், ஊர்த் தலைவருமான கே.சின்னசாமி, கம்பைநல்லூர் பேரூர் முன்னாள் அவைத்தலைவரும் – மொரப்பூர் ஒன்றிய முன்னாள் அவைத்தலைவருமான என்.சின்னசாமி, மல்லசமுத்திரம் கிளைச் செயலாளர் சக்தி முருகேசன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், தயாநிதிமாறன், எ.வ.வேலு, எஸ்.ஜெகத்ரட்சகன், தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வாசுதேவன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் நடேசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மதி, கம்பைநல்லூர் பேரூர் முன்னாள் செயலாளர் மாதேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரியசாமி, சங்கர், குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதற்கு பாமக தலைமை என்ன பதிலடிக் கொடுக்கப்போகிறது என்பதை, நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும். https://www.ullatchithagaval.com/2020/09/08/50408/