விவசாயத் தொழிலைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் வகையில் மோடி அரசு கொண்டுவந்துள்ள ‘வேளாண் சட்டங்களைத்’ திரும்பப்பெற வலியுறுத்தி டிசம்பர் -10 காலை 10.00 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்திய மக்களுக்குச் சோறிடும் விவசாயிகளைப் பிச்சைக்காரர்கள் ஆக்கும் விதமாகவும்; இந்திய விவசாயத் துறையை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றும் விதமாகவும் பாஜக அரசு கொண்டுவந்திருக்கும் 3-வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரலாறு காணாத அளவில் விவசாயிகள் டில்லியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அவர்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சட்டங்கள் இயற்றப்பட்டதற்குப் பிறகு அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கொரோனா நெருக்கடியால் ஏற்கனவே விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் ஏழை எளிய மக்கள் இந்த விலை உயர்வால் சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
விவசாயிகளின் நிலங்களைக் கார்ப்பரேட்டுகள் பறித்துக்கொள்ளும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கால் நூற்றாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில் விவசாயத்துறை மட்டும்தான் சற்றே வளர்ச்சியைக் காட்டுகிறது. அந்தத் துறையையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கவே இந்த சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. மோடி அரசின் இந்த சட்டங்களுக்கு எதிராகக் கடுமையான குளிரிலும் கடந்த 9 நாட்களாக சற்றும் உறுதிகுலையாமல் வீரியம் குன்றாமல் தொடர்ச்சியாக போராடும் விவசாயிகளைத் தேசத்துக்கு எதிரான தீவிரவாதிகள் என அவதூறு செய்யும் இழிசெயலில் சங்கப் பரிவாரங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் தில்லி போராட்டத்தை ஆதரித்தும் டிசம்பர்- 5ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கறுப்புக்கொடி போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. அதனை விசிக சார்பில் வரவேற்று வாழ்த்துகிறோம்.
அத்துடன், டெல்லியில் போராடும் விவசாய அமைப்புகள் எதிர்வரும் 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன. அப்போராட்டம் வெற்றிகரமாக அமைவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்வரும் டிசம்பர்-10ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-எஸ்.திவ்யா.