மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், அவரது தலைமையிலான ‘ஆம் ஆத்மி’ கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளால் இன்று ‘பாரத் பந்த்‘ நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகளும், பல்வேறு விவசாய, சமூக, பொதுநல அமைப்புகளும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு பாஜக மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் பாஜக தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு தடுக்கும் முயற்சியில் டெல்லி போலீசார் செயல்பட்டு வருவதாக ‘ஆம் ஆத்மி’ கட்சி பிரமுகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டுக் காவலில் வைக்கவில்லை என, டெல்லி போலீசார் மறுத்துள்ளனர்.
டெல்லி மாநகராட்சியின் 13,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை எடுக்கக்கோரிதான், மீனாட்சி லேகி தலைமையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு பாஜக மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள் போராட்டம் நடத்துகிறோம். அதற்கு பயந்து கொண்டுதான் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குள் பதுங்கி இருக்கிறார். மற்றப்படி அவரை யாரும் வீட்டுகாவலில் வைக்கவில்லை என்று டெல்லி பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com