வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கிய 10 வயது சிறுமியிடம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்.

அஷ்மிதா.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வடக்கு ஒன்றிய செயலாளர் அருள்நாதனின் மகள் அஷ்மிதா 5-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் நடைபெற்ற போராட்டத்தில் தந்தையுடன் அஷ்மிதாவும் கலந்து கொண்டார்.

போராட்டத்தில் கலந்து கொண்டு தந்தையுடன் இரு சக்கர ஊர்தியில் வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதையறிந்த நான் இன்று (17.12.2020) காலை கொடுமுடி வடக்கு ஒன்றிய செயலாளர் அருள்நாதனின் செல்பேசியில் தொடர்பு கொண்டு சிறுமி அஷ்மிதாவிடம் நலம் விசாரித்தேன். சிறுமியை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி பெற்றோரிடம் கூறினேன். 10 நாட்களுக்கு ஒருமுறை தாத்தாவை (என்னை) தொடர்பு கொண்டு பேசும்படியும் கூறினேன்.

அஷ்மிதாவிடம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்? என்று கேட்ட போது சற்றும் யோசிக்காமல், ‘’ கலெக்டர் ஆக விரும்புகிறேன்” என்று அந்த சிறுமியிடம் இருந்து பதில் வந்தது. அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த நான், அதற்காக நன்கு படித்து தயாராகும்படியும், எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வாழ்த்துவதாகவும் கூறினேன்.

எதற்காக போராட்டம் நடத்தப்பட்டது? அதில் எதற்காக நீ கலந்து கொண்டாய்? என்று கேட்ட போது அதற்கு போராட்டத்தின் நோக்கம் குறித்து அந்த சிறுமி தெளிவாக பதில் அளித்தாள். இட ஒதுக்கீட்டின் நோக்கம், அதனால் ஏற்படும் நன்மை ஆகியவை குறித்து அந்த சிறுமிக்கு சில நிமிடங்கள் விளக்கி, வாழ்த்தி விடை பெற்றேன்.
வருங்கால தலைமுறைக்கு அடுத்த தலைமுறையும் சமூகநீதி குறித்த புரிதலுடன் உருவாவதும், அதற்காக ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே போராட்டக் களத்திற்கு செல்வதும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

ஏ.வி.அனுசியா.

Leave a Reply