இன்று (18-12-2020), விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளினுடைய தலைவர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தை முடித்து வைத்து,மு.க.ஸ்டாலின் ஆற்றிய நிறைவுரையின் விவரம் பின்வருமாறு:
அனைவருக்கும் வணக்கம். நான் உரையாற்றிட வந்துவிடவில்லை; இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கிய நேரத்திலேயே நான் முன்னுரையாக உரையாற்றி விட்டேன். ஏற்கனவே காலம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரையில் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்து, முறையாக காவல்துறையிடம் அனுமதி வேண்டும் என்று கேட்டோம்; அனுமதி தரவில்லை – அனுமதியில்லாமல் தடையை மீறி நடைபெறுகின்ற போராட்டம்தான் இந்தப் போராட்டம்.
இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சிற்றரசு, அதே போல் நம்முடைய மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, வேலு எனச் சென்னையில் உள்ள நம்முடைய மாவட்டக் கழகங்களைச் சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள் என முதலில் நம்முடைய மாவட்ட கழகங்களுக்கு நான் ஒரு நன்றியைச் சொல்லியாக வேண்டும். ஏனென்றால் நேற்றைக்கு இந்த நேரம் வரையில், இந்த போராட்டம் நடைபெறுமா, இங்கு நடைபெறுமா அல்லது இந்த போராட்டத்தை நடைபெற விடாமல் தடுத்து, அதை மீறி நடத்துகின்ற நேரத்தில் கைது செய்யப்பட்டு, சிறைக்குள் சென்று இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போகிறோமா என்று நான் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
“தடை போட்டு இருக்கிறார்களே என்ன செய்யப் போகிறோம்?” என்று அண்ணன் வைகோ அவர்கள் கூட நேற்று மாலை என்னிடம் தொலைபேசியில் பேசினார். “கவலைப்படாதீர்கள் அண்ணா! தடையை மீறி நடத்துவோம். நிச்சயம் போராட்டம் உண்டு” என்று சொன்னேன். நடத்தி முடித்து விட்டோம். வழக்கு வரும். என்ன வழக்கு? நாங்கள் பார்க்காத வழக்குகளா! போராட்டம் 5 மணி வரையில் நடைபெறும் என்று சொன்னோம் இப்போது ஐந்து மணியைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கும் சேர்த்து வழக்கு வரும்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, என்ன வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள். அதனைச் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்காக அல்ல, டெல்லியில் 23 நாட்களாக கடும் குளிரிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் அந்த விவசாயப் பெருங்குடி மக்களுக்காகத் தயாராக இருக்கிறோம். அதைப்பற்றிக் கவலைப்படவில்லை!
மாவட்ட கழக செயலாளர்களோடு நேற்று இரவு முழுவதும் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தேன் இன்று விடியற்காலையில் கூட சேகர்பாபு அவர்களிடத்தில் பேசினேன்.
“மேடை அமைப்பதற்கு பல்வேறு பிரச்சினைகளைக் காவல்துறையினர் ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று சொன்னபோது, “நான் வரட்டுமா?” என்று கேட்டேன். ”நீங்கள் வர வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம். அது எங்கள் வேலை” என்று சொன்னார்.
இந்த நான்கு மாவட்டக் கழகச் செயலாளர்களும் ஒருங்கிணைந்து மிகுந்த கட்டுப்பாட்டோடு, இந்தப் போராட்டம் இந்தளவிற்கு வெற்றி பெறுவதற்குத் துணை நின்றதற்கு நான், இந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் சார்பில், என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தோழமைக் கட்சிகள் ஒவ்வொன்றிலிருந்தும் குறிப்பிட்ட ஒரு சிலர், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் என்று எல்லோரும் பேசியிருக்கிறார்கள். நம்முடைய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் சிறப்பான வகையில் எல்லா கருத்துகளையும் எடுத்து வைத்துப் பேசியிருக்கிறார்கள். அவர்களுடைய சொற்பொழிவுகளை , கருத்துகளை, எண்ணங்களை , உணர்வுகளை நானும் மனமுவந்து வழிமொழியக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்தப் போராட்டத்தை இன்று ஏதோ திடீரென்று நாம் நடத்திக் கொண்டிருக்கவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு முடிவுசெய்து நடத்துகின்ற போராட்டம்தான், இந்தப் போராட்டம். இந்த கொடுமையான மூன்று வேளாண் சட்டங்களை எப்போது அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார்களோ, மறுநாளே தமிழகத்தில் உள்ள நம்முடைய கூட்டணிக் கட்சிகளினுடைய தலைவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, அண்ணா அறிவாலயத்தில் நாம் ஒரு கூட்டத்தைக் கூட்டினோம்.
உடனடியாகக் கண்டித்துத் தீர்மானம் போட்டோம்; நம்முடைய கண்டனத்தை , எதிர்ப்பைத் தெரிவித்தோம். உடனடியாக இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என எடுத்துச் சொன்னோம்.
பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தினோம். அதன்பிறகும், கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்தும் தனித்தனியாகவும் சூழ்நிலைக்கேற்ப போராட்டங்களை நடத்தின.
கடந்த 5-ஆம் தேதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்தினோம். கையில் கருப்புக் கொடி ஏந்தி அந்தப் போராட்டத்தை நடத்தினோம். நான் சேலம் சென்றிருந்தேன்; அங்கு நடைபெற்ற சம்பவங்களையெல்லாம் நான் விளக்க வேண்டியதில்லை; உங்களுக்கே தெரியும்.
தொடர்ந்து இப்படி போராட்டங்கள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல், சகித்துக்கொள்ள முடியாமல், தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆத்திரத்தோடு விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு முதலமைச்சர் என்பதை மறந்து அவர் பேசக்கூடிய பேச்சுகளைப் பார்க்கிறோம்.
ஊர் ஊராகச் சென்று பார்க்கிறாராம்? மக்களையா? மக்களைப் பார்த்தால் உங்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்!
ஆய்வு என்ற பெயரில் அரசு அதிகாரிகளை , கட்சிக்காரர்களை அழைத்து உட்கார வைத்து, ஒரு ‘ஷோ’ நடத்திவிட்டு, கொரோனா ஆய்வு என்ற பெயரில் சென்று, பத்திரிகையாளர்களை அழைத்து வைத்துக்கொண்டு, அவர்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லிவிட்டு, இவராகவே பதில் சொல்கிறார். அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற எனக்கு வேலையே இல்லை என்கிறார். உங்களது வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றுவதுதான் என்னுடைய வேலை! அதுதான் எதிர்க்கட்சித் தலைவருடைய வேலை!
எப்போதும் அறிக்கைவிட்டுக் கொண்டே இருக்கிறேன் என்கிறார். ‘அறிக்கைவிடாமல் அவியலா செய்ய முடியும்’ என்று நான் கேட்டேன். ‘அறிக்கை நாயகன்’ என்ற பட்டத்தையும் அவர் எனக்கு அளித்தார். முதலமைச்சரே அந்தப் பட்டத்தைத் தருகிறார்; நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்தப் பட்டத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் நான் உங்களுக்குக் கொடுத்த பட்டம்தான் ‘ஊழல் நாயகன்’. அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.
எப்போதும், “நான் விவசாயி… நான் விவசாயி…” என்று சொல்வதோடு “எனக்கு என்ன விவசாயம் தெரியும்” என்று கேட்கிறார். தலைவர் கலைஞர் அவர்கள் 1957-ஆம் ஆண்டு முதன்முறையாக குளித்தலையில் வெற்றி பெற்ற அவர், நங்கவரம் விவசாயிகளுக்காகப் போராட்டம் நடத்தியது பற்றி இங்கே டி.ஆர்.பாலு அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டார். ஒரு வரலாற்றை நினைவுபடுத்துகிறேன், “சட்டமன்ற உறுப்பினராகப் பேசிய முதல் கன்னிப்பேச்சே, விவசாயிகள் போராட்டம் பற்றியதுதான்”. அவருடைய மகன் நான்!
“7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்த தலைவர் கலைஞர்” என்று அண்ணன் வைகோ அவர்கள் பேசுகிறபோது சொன்னாரே, அவருடைய பிள்ளை ஸ்டாலின்! விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இலவச மின்சாரம் தந்தாரே தலைவர் கலைஞர், அவருடைய பிள்ளை ஸ்டாலின்! இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலமாக நான் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புவது, எல்லோரும் சொன்னதுபோல், இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. உள்ளபடியே மகிழ்ச்சி! ஆனால், டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் அந்தப் போராட்டத்தில் என்றைக்கு வெற்றி பெறுகிறார்களோ, அதுவரையில் நம்முடைய போராட்டமும் ஓயாது!
அதற்கான வியூகங்களை நம்முடைய கூட்டணிக் கட்சிகளினுடைய தலைவர்களுடன் ஒருங்கிணைந்து, கலந்துபேசி முடிவெடுத்து, அவ்வப்போது அந்தப் போராட்டத்தை நாங்களும் நடத்துவோம்… நடத்துவோம்… என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசினார்.
–கே.பி.சுகுமார், சி.கார்த்திகேயன்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com