2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 16-ஆம் தேர்தல் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவிருக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். தமிழ்நாட்டை விட பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த தேர்தல் இன்னும் முக்கியமானதாகும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எப்போதெல்லாம் அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகச்சிறப்பான திட்டங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. அதற்குக் காரணம் கடந்த காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கூடுதல் எண்ணிக்கையில் உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் போதெல்லாம், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வளர்ச்சிக்கும் எவையெல்லாம் மிகவும் அவசியம் என்பதை ஆராய்ந்தறிந்து அவற்றை செயல்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தது தான். தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் ஏராளமான கனவுத் திட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறார். அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் பா.ம.க. உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் பேரவைக்குச் செல்ல வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தின் மற்ற கட்சிகளையும் விட முதன்முதலில் தயாரான கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதியே பா.ம.க.வின் தேர்தல் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி, தேர்தலுக்கு நாம் தயாராகி விட்டதை அறிவித்தோம். தமிழ்நாடு முழுவதும் 100 தொகுதிகளை அடையாளம் கண்டு, அந்தத் தொகுதிகளில் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படையை அமைத்திருக்கிறோம். அப்படைகளின் மூலமாக மட்டும் 2 கோடி வாக்காளர்களை சந்திக்க வேண்டும்; அவர்களில் பெரும்பகுதியினரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிரந்தர வாக்காளர்களாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம்.
மருத்துவர் அய்யா அவர்கள் கட்டளையிட்டதைப் போன்று புத்தாண்டில் தொடங்கி 100 நாட்களுக்கு தீவிர களப் பணியாற்ற பாட்டாளி மக்கள் கட்சி சொந்தங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறோம். பாட்டாளி மக்கள் கட்சி எத்தனைத் தொகுதிகளில் போட்டியிட்டாலும் அத்தனை தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது தான் பாட்டாளி சொந்தங்களின் முதன்மைப் பணி. அதற்காக மருத்துவர் அய்யா அவர்கள் காட்டும் வழியில் பயணிக்க பாட்டாளிகள் தயாராக இருக்கிறோம்.
தமிழக அரசியலின் பிதாமகர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். அவரது சொல் தான் பாட்டாளிகளுக்கு வேதம். தமிழ்நாட்டின் நலனையும், தமிழ்நாட்டு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் அய்யா அவர்கள் எந்த முடிவையும் எடுப்பார். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் முன்னேற்றம் என்பது தான் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியம்; அதை அடைவதற்கான கருவி சமூகநீதி தான். இவற்றை உறுதி செய்யவே அவர் இப்போதும், எப்போதும் போராடி வருகிறார். மருத்துவர் அய்யா அவர்களின் இந்தக் கொள்கையுடன் உடன்படுவோர் அனைவரும் பாட்டாளிகளின் கூட்டாளிகள் தான்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழக மக்களின் முன்னேற்றம், சமூகநீதி ஆகியவற்றை உறுதி செய்ய தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையான கட்சியாக உருவெடுக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த இலக்கை எட்டும் வகையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வழங்குகிறது.
பொதுத் தீர்மானங்கள்:
தீர்மானம் 1: தமிழ்நாட்டில் கல்வி- வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும்!
சமூக அடிப்படையிலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களை முன்னேற்றுவதற்கான மிகச் சிறந்த தீர்வுதான் இடஒதுக்கீடு ஆகும். சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்பட்டாலும் கூட, நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தே தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு என்பது சமமானவர்களுக்கு இடையிலான போட்டியை உறுதி செய்யத் தவறிவிட்டது. நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் 100% இடப்பங்கீடு வழங்கப்பட்டாலும் கூட, பெரும்பான்மையான இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் சமூகத்தின் உயர்நிலையில் உள்ளவர்களுடன் சமூகத்தின் அடித்தட்டில் மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் தான் போட்டியிட நேர்ந்தது. இதனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெரும்பான்மையான விழுக்காட்டை சமூகத்தின் உயர்நிலையில் உள்ளவர்கள் மட்டுமே அனுபவித்தனர்.
இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகும், 1951ஆம் ஆண்டில் தொடங்கி, 1989ஆம் ஆண்டு வரை 38 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஒரே பிரிவில் தான் வைக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் ஒரே நிலையிலான சமூகங்கள் இல்லை என்பதால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அனைத்துச் சமூகங்களுக்கும் சீராக கிடைக்கவில்லை.
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, மருத்துவர் அய்யா தலைமையில் வன்னியர் சங்கம் தொடர்ந்து 10 ஆண்டுகள் போராடியதுடன், 21 உயிர்களை இழந்தது உள்ளிட்ட ஏராளமான தியாகங்களையும் செய்ததன் பயனாக, 1989ஆம் ஆண்டில் வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதிகளைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்தப் பிரிவிலும் சமநிலை அற்ற சமூகங்கள் இடம்பெற்றிருந்ததால், வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவில் உள்ள அனைத்துச் சாதிகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வன்னிய சமுதாயத்தின் மக்கள் தொகை மட்டும் 75 விழுக்காடு ஆகும். ஆனால் வன்னியர்களுக்கு 7% அல்லது 8% இடஒதுக்கீடு கூட கிடைக்கவில்லை. இதற்கு தனி இடஒதுக்கீடுதான் தீர்வாகும்.
கேரளத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 8 பிரிவுகளாகவும், ஆந்திரத்தில் 6 பிரிவுகளாகவும், கர்நாடகத்தில் 5 பிரிவுகளாகவும் பிரித்து இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வெறும் இரு பிரிவுகளாக மட்டும் பிரித்து இடஒதுக்கீடு வழங்குவதால் சமூக நீதியை நிலைநிறுத்த முடியாது. வன்னியர்களின் கல்வி, சமூக, வேலைவாய்ப்பு நிலைகள் இந்தக் கோரிக்கைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் உள்ளன. வன்னிய மக்கள் கல்வி, சமூக நிலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை கடந்த காலங்களில் சட்டநாதன் மற்றும் அம்பாசங்கர் ஆணையங்கள் புள்ளி விவரங்களுடன் விளக்கியுள்ளன. எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், நீதியரசர் தணிகாச்சலம் தலைமையிலான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பரிந்துரை அறிக்கையைப் பெற்று வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்; அதற்கான தனிச்சட்டத்தை சட்டப்பேரவையில் விரைவாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2: கடலூர், காவிரிப் பாசன மாவட்டங்களில் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும்!
தமிழ்நாட்டை அடுத்தடுத்துத் தாக்கிய நிவர் மற்றும் புரெவி புயல்களால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம் தான். கடலூர் மாவட்டத்தில் பல இலட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டன; கால்நடைகளும் உயிரிழந்து விட்டன; நூற்றுக்கணக்கான குடிசைகள் சரி செய்ய முடியாத அளவுக்கு முற்றிலுமாக சேதமடைந்து விட்டன. மழை – வெள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும், மத்திய அரசிடமிருந்து நிதியுதவி வராததைக் காரணம் காட்டி, இன்று வரை உழவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால், மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
கடலூர் மட்டுமின்றி, காவிரிப் பாசன மாவட்டங்களிலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெள்ள பாதிப்புகள் அதிகமாக உள்ளன. பல இடங்களில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, முளைத்து வீணாகிவிட்டன. கடந்த 9 ஆண்டுகளாகவே இயற்கைச் சீற்றங்களால் உழவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நடப்பு ஆண்டில் தான் உழவர்களுக்கு இலாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. புயல் மழையால் அந்த வாய்ப்பும் கைநழுவிவிட்டது. சேதமடைந்த பயிர்கள் மற்றும் பொருட்களுக்கு இழப்பீடு வழங்கப்படாவிட்டால், உழவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; சேதமடைந்த குடிசைகளுக்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருமுறை உதவித் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3: புயல் பாதிப்பு – தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்!
வங்கக் கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயல்கள் தாக்கியதால், தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவிடம், தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக மத்திய அரசு ரூ.3,758 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதன்பின் சுமார் ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், இன்றுவரை மத்திய அரசு எந்தவிதமான நிதியுதவியையும் அறிவிக்கவில்லை என்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. புரெவிப் புயல் தமிழ்நாட்டை திசம்பர் முதல் வாரத்தில் தாக்கிய நிலையில், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழு இருநாட்களுக்கு முன்பு தான் தமிழகம் வந்துள்ளது. புயல், மழை, வெள்ளத்தால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிதியுதவி வழங்குவதில் மத்திய அரசு இவ்வளவு தாமதம் செய்வது நியாயம் அல்ல. பொங்கல் திருநாளுக்கு முன்பாக உழவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இழப்பீடு வழங்க வசதியாக, மத்திய அரசு தமிழ்நாடு அரசு கோரிய நிதி உதவியை குறைக்காமல் முழுமையாக வழங்கவேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4: உழவர்கள் போராட்டத்திற்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும்!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் தில்லியில் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 36வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுக்கும் உழவர்களுக்கும் இடையே இதுவரை 6 கட்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டும், தீர்வு ஏற்படவில்லை. தில்லியில் கடும் குளிர் நீடிக்கும் நிலையில், உழவர்களின் போராட்டம் நீடித்துக் கொண்டே செல்வது உழவர்களுக்கு உடல்நலன் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, உழவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து மத்திய அரசும், உழவர் அமைப்புகளும் திறந்த மனதுடன் பேச்சு நடத்தி, இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வுகாண வேண்டும்; அதன் மூலம் உழவர்களின் 36 நாள் போராட்டத்தை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு கோருகிறது.
தீர்மானம் 5: தமிழ்நாட்டில் அரசுப் பணிகள் தமிழர்களுக்கே; தனியார் வேலைவாய்ப்புகளில் 80% தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்ற வேண்டும்!
இந்தியா ஒரே நாடு; நாடு முழுவதும் ஒரே நடைமுறை என்று மத்திய அரசு வலியுறுத்தி வந்தாலும், பெரும்பான்மையான மாநில அரசுகள் தங்களது மாநிலத்தில் உள்ள கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான கதவுகளை மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மூடி வருகின்றன. மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு வேலைவாய்ப்புகள் முழுக்க முழுக்க உள்ளூர் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் வேலைவாய்ப்புகளில் 80% வரை உள்ளூர் மக்களுக்கே வழங்கப்படும் என்று ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, குஜராத், மராட்டியம், மத்தியப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் அரசுகள் அறிவித்திருக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது. அண்மைக்காலமாக அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர்வது அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் தான் பிற மாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வந்தார்கள். அதனால், தமிழ்நாட்டில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பிற மாநிலத்தவரை பணியில் அமர்த்துவதற்காகவே பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் திட்டமிட்டு குளறுபடிகள் நிகழ்த்தப்படுகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்கள் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்று அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசும் அதே நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், தமிழகத்தில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படும். அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும். இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகள் முழுக்க முழுக்க தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்; தனியார் வேலைவாய்ப்புகளில் 80% உள்ளூர் மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டத்தையும் தமிழக சட்டப்பேரவையில் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டம் கோருகிறது.
தீர்மானம் 6: மாவட்ட நீதிபதிகள் தேர்வு முறையில் மாற்றம் செய்யவேண்டும்!
தமிழ்நாட்டில் 31 மாவட்ட நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வை எழுதிய சுமார் 2500 பேரில், 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இதற்குக் காரணம் மாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் கடைபிடிக்கப்பட்ட பொருத்தமற்ற தேர்வு முறையும், தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறையும் தான் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை தரவரிசைப்படி ஆட்களை தேர்வு செய்யவேண்டுமே தவிர, குறிப்பிட்ட அளவுக்கு மேல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. அதுமட்டுமின்றி, போட்டித் தேர்வுகளில் மைனஸ் மதிப்பெண் வழங்கக் கூடாது என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்து உள்ள நிலையில், உயர்நீதிமன்றம் நடத்திய தேர்வுகளிலேயே மைனஸ் மதிப்பெண் வழங்கப்படுவது நியாயமல்ல. எனவே, சமூக நீதிக்கு எதிரான இத்தேர்வு முறையை இரத்து செய்துவிட்டு, ஏற்கெனவே இருந்த முறைப்படி நீதிபதிகள் தேர்வை நடத்த வேண்டும் என்று பா.ம.க. கோருகிறது.
தீர்மானம் 7: தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்!
இந்தியாவில் நடத்தப்படும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் மக்களின் மனநிலையை எதிரொலிப்பதற்கு மாற்றாக, ஒரு சார்பினருக்கு ஆதரவாக கருத்தை திணிக்கும் வகையில் தான் நடத்தப்படுகின்றன. இதனால், தேர்தல் களத்தில் சமநிலை தன்மை பாதிக்கப்படுகிறது. இது மிகப் பெரிய ஜனநாயக படுகொலை ஆகும். வசதிபடைத்த கட்சிகள் தங்களுக்குச் சாதகமாக கருத்துக் கணிப்புகளை வெளியிடச் செய்ய கோடிக்கணக்கில் செலவிடுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.
தேர்தல் கணிப்புகள் துல்லியமான மதிப்பீட்டை தருவதில்லை; அதனால் அவை தடை செய்யப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியிருக்கிறார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான். இந்தியா போன்ற நாடுகளில் தேர்தல்கள் ஐயத்திற்கு இடமின்றி நடத்தப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்காக தேர்தல் கணிப்புகளை தடை செய்யவும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை அவற்றின் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 8: சென்னை – சேலம் இடையிலான 8 வழிச் சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும்!
சென்னை & சேலம் இடையே 8 வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. அதே நேரத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று, 8 வழிச்சாலைக்காக உழவர்களிடம் இருந்து நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தியது தவறு என்றும், அந்த நிலங்கள் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மனநிறைவு அளிக்கிறது. உழவர்களின் நிலங்களை சட்டப்போராட்டத்தின் மூலம் அவர்களுக்கே திரும்பப் பெற்றுத்தந்த மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு இப்பொதுக்குழு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
சென்னைக்கும் சேலத்திற்கும் இடையே ஏற்கெனவே 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி விரிவுபடுத்தும் பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளன. இத்தகைய சூழலில், சென்னை & சேலம் இடையே இன்னொரு தேசிய நெடுஞ்சாலை தேவையில்லை. எனவே, சென்னை & சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்; இதற்காக மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 9: காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டின் முதன்மைப் பாசன ஆதாரமாக திகழும் காவிரி ஆறு, ஒரு காலத்தில் கரைபுரண்டு ஓடியதை இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. ஆனால், காலநிலை மாற்றம், கர்நாடக அரசின் துரோகம் உள்ளிட்ட காரணங்களால், கர்நாடகத்தில் மழை பெய்தால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெறுவது எட்டாவது அதிசயமாக மாறி வருகிறது. இதனால், டெல்டா உழவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். காவிரி ஆற்றை வற்றாத ஜீவநதியாக மாற்றுவதற்கு சிறந்த வழி கோதாவரி – காவிரி இணைப்பு ஆகும். கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் 1100 டி.எம்.சி. நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையில், அதில் ஒரு பகுதியை காவிரியில் திருப்புவதன் மூலம் காவிரி பாசன மாவட்டங்களை மீண்டும் வளம் கொழிக்கும் பகுதியாக மாற்ற முடியும். காவிரியில் வரும் கோதாவரி நீரை குண்டாறு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் தென் மாவட்டங்களும் பயனடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தை செயல்படுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன்பயனாக, இத்திட்டத்தை செயல்படுத்த மத்தியஅரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இந்தத் திட்டத்தில் சம்மந்தப்பட்ட மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ஒப்புதல் அளிக்காததால் திட்ட அறிக்கையை இறுதி செய்வதும், நிதி ஒதுக்குவதும் தாமதமாகிறது. காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டப் பணிகள் இப்போது தொடங்கப்பட்டால் கூட, நிறைவேற்றி முடிக்க 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் எனும் நிலையில், உடனடியாக திட்டப் பணிகள் தொடங்கப்பட வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர்களின் மாநாட்டை உடனடியாக கூட்டி, காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்தை இறுதி செய்து அறிவிக்க வேண்டும்; நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 10: மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27% இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும்!
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய தொகுப்பு இடங்கள் உருவாக்கப் பட்டது முதல் இன்று வரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப் படவில்லை. இந்த சமூக அநீதிக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியும், பிற அரசியல் கட்சிகளும் முதலில் உச்சநீதிமன்றத்திலும், பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து முடிவு எடுக்க 3 உறுப்பினர் குழு அமைக்க வேண்டும்; குழு அமைக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் ஆணையிட்டது. ஆனால், அதன்பின் 6 மாதங்களாகும் நிலையில், இன்றுவரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாதது வேதனையளிக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், அதில் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இளநிலை மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அறிவிக்கை இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாக மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசை பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் கோருகிறது.
தீர்மானம் 11: ஆன்லைன் கந்துவட்டி செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும்!
பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தல் காரணமாக, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வெற்றிபெற்ற பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது. ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில், ஆன்லைன் கந்துவட்டி செயலி எனும் புதிய உயிர்க்கொல்லி உருவாகி இருக்கிறது. கந்து வட்டி செயலிகள் மூலம் கடன் பெறுவோர், அதன் குறித்த காலத்தில் செலுத்தாவிட்டால், கடன் பெற்றவர்களை கந்து வட்டி செயலி நிறுவனங்கள் மிக மோசமாக அவமானப்படுத்துகின்றன. அதை தாங்க முடியாமல், கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் கந்துவட்டி செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கியும், தமிழக காவல்துறையும் எச்சரித்துள்ளன. இது போதுமானது அல்ல. இந்த செயலிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை. அந்தச் செயலிகளை இயக்குபவர்கள் யார் என்று தெளிவாக தெரியும் நிலையில், அவற்றை முடக்க வேண்டும்; கடன் வாங்குபவர்களை அவமானப்படுத்தி தற்கொலை செய்துகொள்ளும் சூழலுக்கு தள்ளுபவர்களை கைது செய்யவேண்டும் என்று பா.ம.க. வேண்டுகிறது.
தீர்மானம் 12: பேரறிவாளன் விடுதலைக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும்!
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு, 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அமைச்சரவை கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அதன்பின், 27 மாதங்கள் ஆகியும் அதன்மீது தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆளுநர் தாமதம் செய்வதை எதிர்த்து பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விசயத்தில் முடிவு எடுப்பதில் தாமதமாவதற்கு ஆளுநர் தரப்பில் கூறப்படும் காரணங்களை ஏற்க முடியாது என்றும், 7 தமிழர் விடுதலை குறித்து விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அண்மையில் ஆணையிட்டது. அதன்பிறகும் கூட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்காதது நியாயம் அல்ல. செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ள 7 தமிழர்களும் 30 ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்ட நிலையில், இனியும் அவர்களை தண்டிப்பதில் அர்த்தமில்லை. எனவே, தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்துகிறது.
தீர்மானம் 13: தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளின் குடிப்பகங்கள், நேற்று முன்நாள் டிசம்பர் 29ஆம் தேதி திறக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கு குடிப்பகங்கள் மூடப்பட்டது நல்ல தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவை மீண்டும் திறக்கப்பட்டு இருப்பது ஏமாற்றமளிக்கிறது. படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைபடுத்தப்படும் என்று கொள்கை முடிவு எடுத்துள்ள தமிழக அரசு, மூடப்பட்ட குடிப்பகங்களை மீண்டும் திறப்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மதுவிலக்கை ஏற்படுத்தும் நோக்குடன் 2016, 2017ஆம் ஆண்டுகளில் தலா 500 மதுக்கடைகளை மூடிய தமிழக அரசு, மீதமுள்ள மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும். அது குறித்த அறிவிப்பை பொங்கல் பரிசாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 14: பா.ம.க சிறந்த செயல் வீரர் விருதுபெறும் சொந்தங்களுக்கு வாழ்த்துகள்!
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களைப் போன்று உழைக்க மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், 2020ஆம் ஆண்டு முதல் பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல் வீரர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு வழங்கப்படும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார். அதன்படி, முதல் ஆண்டில் சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் ச.சிவப்பிரகாசம், பா.ம.க. அமைப்புச் செயலாளர் மீ.கா.செல்வகுமார், மகளிர் அணித் தலைவர் நிர்மலா ராசா, பா.ம.க. துணைத் தலைவர் திருத்துறைபூண்டி டி.எஸ்.ஆர்.எம். சுப்பிரமணிய அய்யர், இளைஞரணிச் செயலாளர் பி.வி.செந்தில் ஆகிய ஐவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல் வீரர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்காக உழைப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் வகையில், புதிய விருது வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ள மருத்துவர் அய்யா அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 15: 2021-ஆம் ஆண்டு பா.ம.க. வெற்றிகளை குவிக்கும் ஆண்டாக அமைய உறுதி ஏற்போம்!
2021ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு ஆகும். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமின்றி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்களும் விரைவில் நடத்தப்பட உள்ளன. இவற்றில் வெற்றிகளை குவிப்பதுதான் பா.ம.க.வின் இலக்கு. இந்த இலக்கை பாட்டாளி சொந்தங்களின் முழுமையான ஒத்துழைப்பின்றி எட்டுவது சாத்தியமல்ல. 2020ஆம் ஆண்டு அனைத்துத் தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிக்கும் ஆண்டாகவே அமைந்தது. எனினும், தம்பிகள் படை, தங்கைகள் படையை உருவாக்கி, பாட்டாளி மக்கள் கட்சியை உயிர்ப்புடனும் துடிப்புடனும் மருத்துவர் அய்யா அவர்கள் வழிநடத்தி வருகிறார். தம்பிகள் படை, தங்கைகள் படையின் தொடர்ச்சியாக, மக்கள் படைகள் அமைக்கப்பட வேண்டும். தம்பிகளும், தங்கைகளும் மக்களைச் சந்தித்து, அவர்களின் ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுவதன் மூலமாக மட்டுமே இலக்கை எட்ட முடியும். இதைக் கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் 2021ஆம் ஆண்டில் தீவிரமாக பணியாற்றி, வெற்றிகளை குவிக்க இந்த சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்ள இக்கூட்டம் கோருகிறது.
தீர்மானம் 16: புதுவை மாநிலத்தில் துணை நிலை ஆளுனருக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் நலப் பணிகளை உறுதி செய்ய வேண்டும்!
புதுவை மாநிலத்தில் துணை நிலை ஆளுனருக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி காரணமாக அம்மாநிலத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை; மக்கள் நலப் பணிகளும் முடங்கிக் கிடக்கின்றன. இது ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக உள்ளது. துணை நிலை ஆளுனராக இருந்தாலும், முதல்வராக இருந்தாலும் அவர்களின் கடமை மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை செய்வது தான்; மாறாக, தனிமனித விருப்பு வெறுப்புகளையும், ஈகோவையும் மனதில் கொண்டு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு துணைநிலை ஆளுனருக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்; அதன்மூலம் நிர்வாகம் சிறப்பாக இயங்குவதையும், மாநில வளர்ச்சிப் பணிகளும், மக்கள்நலப் பணிகளும் தடையின்றி செயல்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.
-எஸ்.திவ்யா., ப.செல்வம்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com