சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணத்தை அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள் போராடி வந்த நிலையில், மாணவர்களை வெளியேற்றி விட்டு, கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டிருக்கிறது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக் கட்டணமாக ரூ. 5.44 லட்சம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் அதிகம் என்பதால் இந்தக் கட்டணத்தை அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் ஆண்டுக் கட்டணமான ரூ.11,600/-க்கு இணையாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 43 நாட்களாக போராடி வந்தனர். அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு அதிகரித்து வந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மருத்துவக் கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் இன்று மதியம் அறிவித்தது. அதுமட்டுமின்றி, விடுதிகளில் தங்கிப் படித்து வந்த மருத்துவ மாணவர்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, விடுதி அறைகள் மூடப்பட்டு வருகின்றன. பல் மருத்துவக் கல்லூரியும் காலவரையின்றி மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கட்டணக் குறைப்பு கோரிக்கை இன்றோ, நேற்றோ புதிதாக எழுப்பப்பட்ட ஒன்றல்ல. அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் தனியாரிடம் இருந்த போதே இந்தக் கோரிக்கையை மாணவர்களும், பெற்றோரும் எழுப்பி வந்தனர். பல்கலைக்கழக நிர்வாகம் தனியாரிடமிருந்து அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்ட பிறகும் மருத்துவக் கல்விக் கட்டணம் குறைக்கப்படாதது தான் சிக்கலை பெரிதாக்கியது.
இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த ஏழை மாணவர்களால் அளவுக்கு அதிகமான கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தான், கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி 43 நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
மாணவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்பதால், அவர்களுடன் கல்லூரி நிர்வாகம் பேச்சு நடத்தி சிக்கலுக்கு தீர்வு காண்பது தான் சரியான நடவடிக்கையாக இருந்திருக்கும். மாறாக கல்லூரியை காலவரையன்றி மூடுவதும், மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றுவதும் சரியானது அல்ல. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு எப்போது ஏற்றுக் கொண்டதோ, அப்போது முதலே சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரியாகி விட்டது.
ஆனால், அரசே மருத்துவக் கல்லூரியை எடுத்துக் கொண்ட பிறகும் தனியாரிடமிருந்த போது வசூலிக்கப்பட்ட அதே கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?
இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அளவுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்து வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதே அளவு கட்டணத்தைத் தான் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் வழங்க வேண்டும் என்று பல முறை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கும், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கும் தகுதியில் எந்த வேறுபாடும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு 11,600/- ரூபாயும், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5.44 லட்சமும் கட்டணமாக வசூலிப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு குறைந்தது ரூ.3.85 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.4.15 லட்சம் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், அதைவிட சுமார் 50% கூடுதல் கட்டணம் வசூலிப்பது கட்டணக் கொள்ளையாகவே பார்க்கப்படும். இது நியாயமல்ல.
கல்வி மற்றும் கல்விக் கட்டணம் விவகாரங்களில் எத்தனையோ சலுகைகளை வழங்கி வரும் தமிழக அரசு, இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கல்விக் கட்டணத்தைக் குறைப்பதில் மட்டும் இந்த அளவுக்கு பிடிவாதம் காட்டத் தேவையில்லை. இந்தக் கட்டணக் குறைப்பால் தமிழக அரசுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படப்போவதில்லை.
எனவே, இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கான கல்விக் கட்டணத்தை அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக ரூ.11,600/- ஆக குறைக்க வேண்டும். அதன்மூலம் ஏழை வீட்டுக் குழந்தைகளும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதை சாத்தியமாக்க வேண்டும்.
இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ், தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுத்தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
http://www.ullatchithagaval.com/2020/11/28/52106/
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
அவர் சொல்வது சரியே…