2021 பிப்ரவரி 06ஆம் நாள் சென்னையில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையான அர்ப்பணிப்போடு தீவிரமாகப் பாடாற்றுவது என இச் செயற்குழு தீர்மானிக்கிறது.
2. கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் மேற்கொள்வதற்கு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு இந்த செயற்குழு முழுமையான அதிகாரத்தை அளிக்கிறது.
3. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பாதிக்கப்பட்டோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டு இனஅழித்தொழிப்பு மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் உரிய அழுத்தம் தர வேண்டும் என்றும்; இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் இணைந்ததே ஒருங்கிணைந்த தமிழர் தாயகம் என்று இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலைபாட்டை இந்திய அரசு தொடர்ந்து இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.
4. இந்தோ-சீன எல்லையோரத்தில் இந்தியாவின் நிலப்பரப்பை சீனப் படைகள் ஆக்கிரமித்து உள்ளன என்றும், அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தையே சீன ராணுவம் உருவாக்கி இருக்கிறது என்றும் செய்திகள் வெளிவருகின்றன. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்த செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியாவின் எல்லையைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
5. மூன்று மாதங்களாக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை இந்த செயற்குழு முழுமையாக- வலுவாக ஆதரிக்கிறது. பிரதமர் மோடி அவர்கள் வறட்டு கவுரவம் பார்க்காமல் மூன்று வேளாண் விரோத சட்டங்களையும் திரும்பப் பெற முன்வர வேண்டும் என்று இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.
6. மத்திய அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் எஸ்சி/ எஸ்டி மக்களுக்கான நிதி ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டு இருப்பதை இந்த செயற்குழு சுட்டிக்காட்டி வன்மையாகக் கண்டிக்கிறது.எஸ்சி / எஸ்டி மக்களின் மக்கள் தொகைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க முன்வர வேண்டும் என்றும் இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.
7. பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெருகி வருகின்றன. அதைக் கட்டுப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், ‘போக்சோ’ சட்டத்தின்படி மாவட்டம்தோறும் தனி நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் இந்த செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
8. சனாதன கொள்கையைப் பின்பற்றிவரும் பாஜக அரசு இந்த நாட்டை ‘இந்துராஷ்ட்ரம’ என்னும் பெயரில் மதம்சார்ந்த ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில், நாட்டிலுள்ள மதச் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். சொந்த நாட்டிலேயே அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்படுகின்றனர். இத்தகைய மதவெறிப் போக்கைக் கைவிட வேண்டும் என்றும் சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் இந்தச் செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
9. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் தமிழர் விரோத நிலைபாட்டையும், மத்திய அரசின் தூண்டுதலின் படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் எடுத்துள்ள முடிவையும் இந்த செயற்குழு மிகவன்மையாகக் கண்டிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அங்கு உறுதியாக வாதாடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத்தருமாறும், முறையாக விடுதலை செய்யப்படும்வரை இந்த ஏழு பேருக்கும் பரோல் வழங்குமாறும் தமிழக அரசை இந்த செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
10. அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள தமிழகத்தின் 69 % இட ஒதுக்கீடு சட்டத்தை சீர்குலைக்கும் விதமாக இட ஒதுக்கீட்டின் அளவை 50 % ஆகக் குறைத்து பல்கலைக்கழகங்களிலும் இதர மத்திய அரசு நிறுவனங்களிலும் பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது 50% ஆக இருக்கும் ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீடு 27% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சமூக நீதிக்கு எதிராக சமூகத்தகுதியில் முன்னேறிய சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் மும்முரமாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதுவரையிலும் தமிழ்நாட்டில் கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த சமூகநீதிக் கொள்கையைக் கைவிட்டு ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக அரசு மிகப்பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறது. அதிமுக அரசின் சமூகநீதிக்கு எதிரான இந்தப் போக்கை கண்டிப்பதோடு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட 69 % இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாத்திட உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.
11. மத்திய அரசு பணி நியமனங்களில் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கான ‘பின்னடைவு காலிப் பணியிடங்கள்’ (backlog vacancies) ஏராளமாக உள்ளன என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதன் மூலம் அம்பலமாகி இருக்கிறது. மத்திய அரசின் 10 துறைகளில் மட்டும் எஸ்சி பிரிவினருக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 40,500 பின்னடைவு காலிப் பணியிடங்கள் உள்ளன என்றும், எஸ்டி பிரிவினருக்கு 37,000 பின்னடைவு காலிப் பணியிடங்கள் உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது. பாஜக அரசின் தலித் விரோதக் கொள்கையே இதற்கு அடிப்படையான காரணம். மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று இந்த செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக ‘சிறப்பு பணி அமர்த்தும் நடவடிக்கைகளை(Special Drive) மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இந்தச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
12. அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிட நேர சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட போது அதை விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்த்துக் குரல் எழுப்பின. அதன்பின்னரும் அந்த செய்தி ஒளிபரப்பு தொடரும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இத்தகைய சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கையை இந்த செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பை பொதிகை தொலைக்காட்சியில் உடனே நிறுத்தவேண்டும் என்று மத்திய அரசை இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.
13. என்.எல்.சி உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தேர்வு என்னும் பெயரில் முழுக்க முழுக்க வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். அதை இந்த செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேர்வுமுறை மாற்றப்பட வேண்டும். எனவே, உடனடியாக நடந்துமுடிந்த தேர்வை ரத்து செய்ய வேண்டுமாறு தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
–கே.பி.சுகுமார்.