தமிழகத்தில் உள்ள கோயில் யானைகளுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், தேக்கடியில் தொடங்க உள்ளது. இந்த முகாம் 48 நாள்களுக்கு நடைபெறும்.
முகாமில் தங்க வைக்கப்படும் யானைகளுக்கு உடல் பரிசோதனை, சிகிச்சை, உடல் எடை பராமரிப்பு, மருத்துவ மூலிகை உணவு வழங்கல் உள்ளிட்டவை செய்யப்படும். இதையொட்டி, இதற்கான பாதுகாப்பு வேலி, உணவுக் கூடம், பாகன்கள் தங்குமிடம், கண்காணிப்பு கோபுரம் ஆகியவற்றை அமைத்து, முகாம் நடைபெறும் வளாகத்தைச் சுற்றி காட்டு யானைகள், உள்ளிட்ட ஆபத்தான வன விலங்குகள் நுழையாதபடி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புத்துணர்வு முகாமுக்காக திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் யானை ஒன்றும், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் யானைகள் இரண்டும் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் யானை ஒன்றும், ஆக நான்கு யானைகள் திருச்சியில் இருந்து லாரியின் மூலம் இன்று (07.02.2021) காலை 7:30 மணியளவில் மேட்டுப்பாளையம் தேக்கடி முகாமிற்கு புறப்பட்டது.
முன்னதாக யானைகளை பக்தர்கள் பக்தி பரசவத்துடன் வணங்கி வழி அனுப்பி வைத்தனர்.
-துரை திரவியம்
படங்கள்:-ஸ்ரீரங்கம் பாலாஜி பழனி.
Good…