பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலான 32 ஆண்டுகளில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை 5 பேர் வகித்துள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:
- தலித் எழில்மலை (ஆதி திராவிடர்)
- பொன்னுசாமி (ஆதி திராவிடர்)
- தென். சு. மூக்கையா ( தேவேந்திரர்)
- பாலசுந்தரி ( அருந்ததியர்)
- வடிவேல் இராவணன் (தேவேந்திரர்)
1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சென்னை கடற்கரை சீரணி அரங்கத்தில் தொடங்கப்பட்ட போதே, அக்கட்சியின் முதல் பொதுச்செயலாளராக தலித் எழில்மலை அறிவிக்கப்பட்டார்.
கட்சியின் பொதுச்செயலாளர்களாக பதவி வகித்த தலித் எழில்மலை மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணையமைச்சராக (தனிப் பொறுப்பு) பதவி வகித்தார்; பொன்னுசாமி பெட்ரோலியத்துறை இணையமைச்சராக பதவி வகித்தார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த முதல் இரு மத்திய அமைச்சர் பதவி இவைகள் தான். இவை இரண்டுமே பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டன என்பது நினைவுகூறத்தக்கது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளராக ஒரு பெண் நியமிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட போது அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாலசுந்தரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகளில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்குப் பிறகு ஒரு கட்சியில் பொதுச்செயலாளர் பதவி பெண்ணுக்கு வழங்கப்பட்டது பாட்டாளி மக்கள் கட்சியில் தான் என்பது குறிப்பிடத் தக்கது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளராக இப்போது உள்ள வடிவேல் இராவணன் தொடர்ந்து நான்காவது முறையாக அப்பதவியை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்று கட்சியின் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-சி.கார்த்திகேயன்.