தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2021-22ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில், தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையிலும், மாநில உரிமைகளை வென்றெடுக்கும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவை வரவேற்கத்தக்கவை.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் உழவர்கள் நலனுக்கும், வேளாண்மை வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு மட்டும் ரூ.6543 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பாசனப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பாட்டாளி மக்கள் கட்சியால் வலியுறுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் மேட்டூர் உபரி நீர் திட்டம், அத்திக்கடவு – அவினாசி திட்டம் ஆகியவை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவும், தாமிரபரணி – கருமேணியாறு இணைப்புத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாகவும் செயல்படுத்தி முடிக்கப்படும் என்ற அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கக் கூடியவையாகும். ரூ.12,110 கோடி மதிப்புள்ள கூட்டுறவு பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதனால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையைப் போக்கும் நோக்குடன் உடனடியாக ரூ.5,000 கோடி நிதி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும்.
அதேபோல், கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு தொடங்கி 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் கற்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், கணினி அறிவியல் சார்ந்த உயர்கல்வியை மாணவர்கள் எளிதாக கற்க முடியும். பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களும் வரவேற்கப்பட வேண்டியவையாகும்.
டோரோன்டா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபடுவோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 78 விருதுகளுடன், வள்ளலார், காரைக்கால் அம்மையார் ஆகியோர் பெயர்களில் கூடுதலாக இரு விருதுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் தமிழ் வளர்ச்சியில் அரசு காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் வனப்பரப்பு 15,900 ஹெக்டேர் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருப்பதாகவும், பல்லுயிர் வாழிடத் தன்மையில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதாகவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 2000 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்ட 12,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்ற அறிவிப்பும், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பும் தமிழகத்தின் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்த பெரிதளவில் உதவும்.
தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.41,417 கோடியாகவும், நடப்பாண்டில் வாங்கப்படவிருக்கும் கடனின் அளவு ரூ.84,000 கோடியாகவும் அதிகரித்திருப்பதும், தமிழகத்தின் மொத்தக்கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதும் கவலையளிக்கும் விஷயங்கள் தான். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக அரசின் வருவாய் நடப்பாண்டில் 17% குறைந்து விட்ட நிலையில், வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை, கடன்சுமை ஆகியவை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது.
மத்திய அரசின் வரி வருவாயில் மாநில அரசின் பங்கு தொடர்ந்து குறைந்து கொண்டே செல்வது குறித்து கவலை தெரிவித்துள்ள தமிழக அரசு, இந்த அநீதி உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.
2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை மிகவும் நெருக்கடியான சூழலில் தான் தமிழக அரசு தாக்கல் செய்தது. அத்தகைய சூழலில் தமிழக அரசு தயாரித்து தாக்கல் செய்துள்ள நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.
இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
–சி.கார்த்திகேயன்.