திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம் மார்ச் 2-ந்தேதி நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ‘ஆழித் தேரோட்டம்’ மார்ச் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.
திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜர் சுவாமி கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதுமான பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.
இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் (பூமி – நிலம்) தலமாகவும் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 100-க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24-க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் மற்றும் ஒரு வருடத்தின் மொத்த நாட்களை குறிக்கும் விதமாக 365 லிங்கங்களும் இங்கு அமைந்துள்ளன. இந்தக் கோயிலை முழுமையாக சுற்றிப் பார்க்க நிச்சயம் ஒருநாள் ஆகும்.
300 டன் எடையும், 90 அடி உயரமும் கொண்ட ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும், பொதுமக்களும் தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் வடம்பிடித்து இழுத்து வருவார்கள்.
1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைப்பெற்ற தேர்த்திருவிழா, 1927 ஆம் ஆண்டு ஆழித்தேரோட்டத்தின்போது தேர் முற்றிலும் எரிந்துவிட்டதால் நின்றுபோனது, பிறகு 1930 ஆம் ஆண்டு புதிய தேர் உருவாக்கப்பட்டு மீண்டும் தேரோட்டம் 1948 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. பிறகு 1970 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி மற்றும் வடபாதிமங்கலம் தியாகராஜர் முயற்சியால் ஆழித் தேரோட்டம் மீண்டும் நடைபெறத் தொடங்கியது.
இதற்கு முன்பு செல்வி ஜெ.ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதாவது 08.11.2015 அன்று இக்கோயிலில் ‘குடமுழுக்கு’ விழா நடைபெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலில் தான் கன்றை இழந்த பசுவிற்கு மனு நீதி சோழன் நீதி வழங்கினார்.
மனு நீதி சோழன் சோழர் பரம்பரையில் அறியப்பட்ட முன்னோடி அரசர்களுள் ஒருவர். எல்லாளன் என்ற இயற்பெயர் கொண்டு, மனு நீதி சோழ சக்கரவர்த்தி என்று வரலாற்றில் நீங்க இடம் பெற்றவர். இவரது நீதி வழுவா ஆட்சிக்கு இறவா புகழ் சேர்க்கும் விதமாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.
எல்லாளன் தன் பிரஜைகள் எந்த நேரத்திலும் பயமின்றியும், நீதியை பெறுவதில் எள்ளளவும் தாமதமின்றி பெறவேண்டும் என்பதிலும் மிகவும் கவனமாக இருந்தார்.
மக்கள் எந்த நேரத்திலும் தன்னை அணுக அவரது அரண்மனையின் வாசலில் ஒரு மாபெரும் மணிகூண்டை கட்டி அதில் ஒலி எழுப்ப வசதியாக அதன் முனையில் பெரிய கயிற்றையும் கட்டி தொங்கவிட்டிருந்தார். அதோடு நில்லாமல் அந்த மணியின் அசைவு தனக்கு உடனடியாக தெரியும் விதமாக மணியுடன் இணைத்த இன்னொரு கயிற்றை தனது கட்டிலில் இணைத்திருந்தார் எனவும் ஒரு வரலாறு உள்ளது. நீதிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்த மாமன்னனின் வாழ்வில் அவனது நீதிவழுவாமையை சோதிக்க ஒரு கடுமையான சோதனை வந்தது.
ஆம், மன்னரின் புதல்வன் வீதிவிடங்கன் சின்னஞ்சிறு பிள்ளை, அவன் தனது இளம் வயதிலேயே வீர பராக்ரமங்களில் ஈடுபட்டு தலைசிறந்த வீரனாக உருவெடுக்க எண்ணியிருந்தான். அப்படி ஒரு சமயம் அவன் தேரேற்றதில் ஈடுபட்டிருக்கையில், ஆர்வ மிகுதியால் தேரை வீதியில் மிக வேகமாக ஓட்டிச்சென்றான்.
வீதியில் நடமாடிக்கொண்டிருந்தவர்களில் சிலர் அதை ரசித்தும், சிலர் அதை கண்டு அஞ்சியும் விலகிச்சென்றனர். கூடியிருந்த அவனது வயதையொத்த இளம் பிள்ளைகள் ‘வேகம்’, ‘வேகம்’ என்று அவனை மேலும் உற்சாகபடுதினர்.
அந்த வேளையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு ஒரு பசுங்கன்று வழிதவறி ராஜபாட்டையில் வந்துவிட்டது. அதிவேகமாக வந்துகொண்டிருந்த வீதிவிடங்கன் இதை சற்றும் எதிர்பார்கவில்லை. தான் வந்துகொண்டிருந்த தேரை நிறுத்தமுற்படுவதற்குள், அந்த பச்சிளங்கன்று தேரின் கால்களில் அகப்பட்டுகொண்டது.
அடி பட்ட வேகத்தில் அந்த கன்று தூக்கி எறியப்பட்டு அதன் அன்னையின் காலடியில் சென்று விழுந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்த பசு தன் கண்முன்னே அதன் அருமைக்கன்று துடிதுடித்து இறப்பதை கண்டு கதறி அழுதது. தேரோட்டிவந்த வீதிவிடங்கன் நொடிப்பொழுதில் நடந்து முடிந்த சம்பவத்தால் செய்வதறியாது திகைத்தான். தான் ஆர்வ மிகுதியால் செய்த காரியம்; எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தான். தேரை ஓரமாக நிறுத்திவிட்டு கன்று தூக்கி எறியப்பட்ட இடத்தை நோக்கி நடந்தான்.
ஒருவழியாக அந்த தாய் பசுவும் அவன் தேரில் ஏற்றிய கன்றும் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து அதன் அருகில் சென்று பார்த்தான். கன்று தன் இன்னுயிரை இழந்து வெற்றுடம்பாய் கிடந்தது. அதன் தாய் அந்த கன்றின் முகத்தில் அழுகையுடன் தனது நாவால் வருடிக்கொண்டிருந்தது.
ராஜகுமாரன் கதறி அழுதான். கன்றை பிரிந்து வாடும் பசுவின் உள்ளக்குமுறலை அவனால் நன்றாக உணரமுடிந்தது. தெரியாமல் தான் செய்த தவறே ஆனாலும், ஒரு உயிரை பலிவாங்கும் அளவுக்கு கொடூர காரியத்தில் ஈடுபட்டதை எண்ணி வேதனையில் வாடி தவித்தான். பசு எழுந்தது. மௌனமாக அங்கிருந்து நடக்க தொடங்கியது. ராஜகுமாரன் வீதிவிடங்கன் அங்கேயே மண்டியிட்டு அமர்ந்தான். கன்றை இழந்த கனத்த இதயத்துடன் பசு நகரை நோக்கி நடந்தது. மன்னரின் அரண்மனை முன்பாக வந்து நின்றது. நின்று சிறிது நேரம் அந்த மணிக்கூண்டை உற்று பார்த்துவிட்டு தன் வாயினால் அதன் கையிற்றை பிடித்து இழுத்தது.
நீதி மணியோசை கேட்ட மன்னர் திகைத்து எழுந்தார். யாருக்கு என்ன பிரச்சனை நேர்ந்ததோ என்ற குழப்பத்தோடு வெளியில் வந்து பார்த்தார். ஒரு பசு கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தது. அதை கண்ட மன்னர் அந்த பசுவிற்கு எதோ துன்பம் நேர்ந்திருக்கிறது என்பதை உணர்ந்தார். உடனே அங்கிருந்த காவலாளிகளிடம் விவரத்தை கேட்டார். யாருக்கும் என்ன நடந்தது? ஏன் இந்த பசு இங்கு வந்து நீதி கேட்கிறது என்று தெரியவில்லை. அனைவர் முகத்திலும் கவலையும் குழப்பமும் குடிகொண்டிருந்தது.
சற்று நேரத்தில் அந்த பசு, தான் வந்த வழியே திரும்ப நடக்கதொடங்கியது. மன்னரும் அதை தொடர்ந்து நடக்கலானார். அவருடன் சில காவலாளிகளும் தொடர்ந்தனர். பசு நேராக அதன் கன்று இறந்துகிடந்த இடத்தை சென்று அடைந்தது. அங்கு வந்து பார்த்த மன்னர் பேரதிர்ச்சி அடைந்தார். ஓரமாய் நின்றிருக்கும் தேர், இறந்து கிடக்கும் கன்று, கண்ணீருடன் ராஜகுமாரன் வீதிவிடங்கன் ஆகிய அனைத்தையும் கண்ட மன்னர், நடந்ததை ஒருவாறு ஊகித்துக்கொண்டார்.
தந்தையை போலவே நேர்மையுள்ளம் படைத்த அந்த சோழ ராஜகுமாரன் வீதிவிடங்கன் நடந்த விபரத்தை முழுவதுமாய் உரைத்தான்.
மன்னர் எல்லாளன் மனம் வேதனையில் இதுவரை அறியாத கலக்கத்தை அடைந்தது. வீதிவிடங்கன் காவலாளிகளால் கைது செய்யப்பட்டான்.
மறுநாள் அரசவை கூடியது. மக்கள் எல்லோரும் கூடியிருந்தனர். தெரியாமல் தவறு செய்துவிட்ட அந்த பிள்ளைக்காக மனமுருகினார்கள்.
இதுவரை நீதியே தவறாத மன்னன் இதை எப்படி எதிர்கொள்ள போகிறார்?! என்று பெரும் குழப்பத்துடன் பேசிக்கொண்டனர். கன்றை இழந்த பசு அரசவைக்கு கொண்டுவரப்பட்டது. மன்னரின் புதல்வன் வீதிவிடங்கனும் அவைக்கு அழைத்து வரப்பட்டான்.
நீதி விசாரணை தொடங்கியது. வீதிவிடங்கன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு என்ன தண்டனை கொடுத்தாலும் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக கூறினான். மன்னர் அவனை மைதானத்தின் மத்தியில் போய் முன்னரே வெட்டி வைத்திருந்த குழியில் இறங்கசொன்னர். மகனும் மறுபேச்சின்றி அவ்வாறே செய்தான்.
சற்று நேரத்தில் அங்கு ஒரு யானை கொண்டு வரப்பட்டது. இதை கண்ட மக்கள் மனதில் சொல்லவொன்னா திகிலும், பீதியும் அடைந்தனர். தங்கள் இளவரசனுக்கு யானையின் காலை இடறி மரணிக்கும் மரண தண்டனை விதிக்கபட்டிருக்கிறது என்று உணர்ந்த மக்கள்; ‘வேண்டாம், வேண்டாம்’ என்று அவலக்குரல் எழுப்பினர்.
ஆனால், அந்த நீதி நெறி தவறாத மன்னனும் அவன் தவப்புதல்வனும் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு கண்களை மூடி மௌனத்தில் ஆழ்ந்தனர். மகன் சாந்தமே உருவாய் மரணத்தை எதிர்கொண்டான். தந்தை ஆயிரம் சூறாவளிகள் தன் நெஞ்சத்தை சுற்றியடிக்க சற்றும் அசையாத பாறையென நின்றிருந்தார்.
கரிய இமயம் போல் நடந்து வந்த யானை, தன் காலால் அந்த வைர நெஞ்சம் படைத்த இளங்குமரன் வீதிவிடங்கன் தலையை மிதித்து நடந்தது. பசு நீதி கிடைக்கப்பெற்றது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய எல்லாளன், அன்று முதல் ‘மனு நீதி சோழன்’ என்று அழைக்கப்பட்டார்.
நீதிவழுவாமையின் உச்சத்தை நாட்டு மக்களுக்கும், பின்னால் வரப்போகும் பல சரித்திர புகழ் பெற்ற மன்னர்களுக்கும், ஒரு வழிகாட்டும் பாடமாகவும் அமைந்தது இந்த சோழ சக்கரவர்த்தியின் வாழ்கை.
சிலப்பதிகாரமும், பெரியபுராணமும் இந்த வரலாற்றை அழியா புகழுடையதாய் விளக்கியுள்ளன.
தனது நாட்டு மக்களாலும், ஏன் எதிரி நாட்டு மன்னர்களாலும் இவர் ‘தர்மராஜன்’ என்று போற்றப்பட்டார். அனைத்து பிரஜைகளையும் சமமாக பாவித்து, விண்ணோர் போற்றும் ஆட்சி புரிந்த மனுநீதியின் ராஜ்யத்தை புத்தர்களும் போற்றினர்.
இவரது ராஜாங்கத்தை சீண்டிப்பார்க்கவும் யாருக்கும் துணிவில்லாமல் இருந்தது. 70 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்த இந்த மன்னனுக்கு தனது முதிய பராயத்தில் ‘தூதகாமணி’ என்ற சிங்கள இளவரசனால் இன்னல் வந்தது என்பது வரலாற்று உண்மை.
‘மனு நீதி சோழன்’ போன்ற ஒரு ஆட்சியாளன் மறுபடியும் நம் தமிழகத்திற்கு கிடைக்க மாட்டானா?! என்ற ஏக்கம், நம்மைப் போலவே இங்கு பலருக்கும் இருக்கிறது. அதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com